கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 1               கர்த்தர் சொல்லும் வார்த்தை               எரேமியா 1:1-19

என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். (எரே 1:12)

            தேவன் இந்த உலகத்தில் தம்முடைய வார்த்தையை இந்த உலகத்தில் கொடுத்திருக்கிறவர் மாத்திரமல்ல, அதை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் கவனமாக இருப்பவரும், அதை துரிதமாக நிறைவேற்றுகிறவருமாக இருக்கிறார். ஒரு விசுவாசிக்கு தேவன் தம்முடைய வார்த்தையைக் கொடுத்திருப்பது மிகப்பெரிய உன்னதமான சிலாக்கியமாகும். இந்த உலகத்தில் எதையுமே நாம் சார்ந்திருக்க முடியாது. அவைகள் நிலையற்றவைகள். ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை.

            மேலும் அந்த வார்த்தையை தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று தம்மைக் குறித்து சொல்லுவது, அவருடைய வார்த்தையை உறுதியாக நாம் நம்பலாம். “நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது” (எசேக் 12:25) என்று சொல்லுகிறார். நான் கர்த்தர் என்று சொல்லுகிற தேவன், நான் நானே தேவன், என்னையல்லாமல் வேறொரு தேவன் இல்லை என்பதை அவர் உறுதியாக சொல்லுகிறார். அன்பானவர்களே கர்த்தருடைய வார்த்தையை நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு வாழுவோம். நான் சொல்லுவேன், சொல்லும் வார்த்தை நிறைவேறும் என்று சொல்லுவதினால், இந்த உலகத்தில் தேவனுடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்ளுவதும், அதிக உறுதியாக இருப்பதும் மிக அவசியமானது.

            இன்றைக்கு அநேக மக்கள் அனுபவங்களையும், மற்றவர்களுடைய சாட்சிகளையும் அதிகமாய் சார்ந்துகொண்டு, அதன்படியாக கர்த்தர் தனக்கு செய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் ஒவ்வொருவரோடும், ஒவ்வொரு விதமாக இடைபடுகிறவராக இருக்கிறார். ஒருவேளை இன்னொரு சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ செய்ததை கேட்பதை விட, ஆண்டவரே உம்முடைய வார்த்தையில் இவ்விதமாக சொல்லியிருக்கிறீர், அதன்படி செய்தருளும் கர்த்தாவே என்று கேட்பது உறுதியானதும், நிலையானதும், நிச்சயம் நிறைவேறுகிற காரியமாக இது இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை நாம் நம்பி, இந்த கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் வாழும்பொழுது, நாம் ஏமாந்து போகவேண்டிய அவசியமில்லை. உறுதியான கர்த்தருடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.