கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 2                     தேவனே அடைக்கலம்               சங் 37:1 – 40

  “நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்;

இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்” (சங் 37:39)

     நீதிமான்கள் என்று சொல்லப்படுவது கர்த்தருடைய பிள்ளைகள், கர்த்தரை விசுவாசிப்பவர்கள், எப்பொழுதும் கர்த்தரையே சார்ந்து கொள்ளுபவர்கள். அவர்கள் தேவனுடைய விசேஷித்த மக்கள். அவர்களுக்கு விடுதலை, இரட்சிப்பு, மீட்பு எங்கிருந்து வரும்? கர்த்தரிடத்தில் இருந்து தான் வரும். இங்கு சங்கீதக்காரன் நம்பிக்கையோடு கூட, இரட்சிப்பு கர்த்தரால் வரும் என்று சொல்லுகிறார். மெய்யாலுமே தேவனிடத்தில் இருந்து மட்டுமே நமக்கு இரட்சிப்பு வரும். ஏசாயா 12:2 –ல் சொன்னவண்ணம் “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்”. தேவனே நமக்கு இரட்சிப்பாக இருக்கிறார். தேவனே கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எல்லாமும், சகலத்திலும் போதுமானாவராக இருக்கிறார்.

     இன்னுமாக இக்கட்டுக்காலத்தில், அவரே அவர்களுக்கு அடைக்கலம் என்றும் சொல்லப்படுகிறது. உன்னுடைய வாழ்க்கையில் இக்கட்டுகள் வரும்பொழுது, வேறெங்கு நீ அடைக்கலம் போக முடியும்? நிச்சயமாக அவரே நமக்கு அடைக்கலமானவராக இருக்கிறார். சங்கீதம் 9:9 –ல் “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.

       அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய வாழ்க்கையில் இப்பொழுது சிறுமைப்பட்டுபோன நிலையில் இருக்கின்றாயா? கர்த்தர் உனக்கு அடைக்கலமானவர். நிச்சயமாக தேவன் உனக்கு தஞ்சமானவர். மேலும் சங்கீதம் 46:1 –ல் “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” என்று சொல்லப்படுகிறது. கர்த்தர் உனக்கு எப்பொழுதும் ஏற்ற துணையாக இருந்து, அவர் உன்னை வழிநடத்துவார். ஆனால் ஒன்று, நீ எப்பொழுதும் தேவனுடைய பிள்ளையாக வாழுவதும், இருப்பதும் மிக அவசியம் என்பதை மறந்துவிடாதே. உன் வழிகளில்லாம் கர்த்தரைச் சார்ந்துகொள்.