கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 21                   தேவ தண்டனை                  ஆமோஸ் 5 ; 16 -27

‘சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்பட்டது போலவும், அல்லது வீட்டுக் குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனை கடித்தது போலவும் இருக்கும்’ (ஆமோஸ், 5; 19)

இஸ்ரவேல் மக்களை எச்சரித்து, ஆமோஸ் தீர்க்கத்தரிசி இவ்விதமாய் சொன்னார். இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் தேவனுக்குத் தப்பமுடியாது. அவன் ஒரு ஆபத்திலிருந்து தப்புவது போலிருக்கும். ஆனால் வேறொரு ஆபத்தில் அகப்படுவான். மனிதன் தேவனில்லமல் தன்னுடைய வாழ்க்கையை, தானே நடத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறான். இன்றைக்கு எத்தனையோ கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுகிறவர்கள், அவ்விதம் நினைக்கிறார்கள், செயல்படுகிறார்கள், ஆலயத்திற்கும் செல்லுவார்கள் ஆனால் தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். அருமையானவர்களே! தேவன் உங்கள் பக்தியை ஒருக்காலும் அங்கிகரிக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துக்கொள்ளுங்கள்.

இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய தீர்க்கத்தரிசிகள் மூலம் அனுப்பப்பட்ட எச்சரிப்புகளை அலட்சியப்படுத்தினார்கள். தேவ பயமற்றவர்களாய் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு வர இருந்த ஆபத்தை தீர்க்கத்தரிசிகள் முன்னதாக எடுத்துச்சொன்னார்கள். முக்கியமாக இந்த இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பவில்லையென்றால், அசீரியா சாம்ராஜ்யத்தின் ராஜாவினால் மேற்கொள்ளப்பட்டு, ஜெயிக்கப்பட்டு தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதை தெளிவாக கேட்டும் அலட்சியப்படுத்தினார்கள். முடிவில் என்னவாயிற்று, அதேபோல் அசீரிய ராஜா அவர்கள் மேல் படையெடுத்து அவர்களை நாடு கடத்தினான். இஸ்ரவேல் தேசத்தில் புறஜாதிகள் குடியேற்றப்பட்டார்கள்.

அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தையின் மூலம் நமக்கு அனுப்பப்படும் எச்சரிப்புகளை ஏற்றுக்கொள்வோமாக. அப்பொழுது ஆவிக்குரிய அழிவினின்று தப்பிக்க வழி உண்டு. அவ்விதம் எச்சரிப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆசீர்வாதம் பெற்றதுபோல நாமும் பெறுவோமாக. அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்வோம்.