“உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக” (சங்கீதம் 5:11).
நாம் ஆண்டவரை நம்பி வாழும் வாழ்க்கையில், கர்த்தருக்குள்ளான சந்தோஷம் மிகப் பெரிதாக இருக்கும். ஒருவேளை நமக்குப் பாடுகள் இல்லாது இருக்கும்பொழுதுதான் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா? இல்லை. நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழும் பொழுது நிச்சயமாக அநேக போராட்டங்கள், உபத்திரவங்கள், நெருக்கங்கள் உண்டு. ஆனால் அவைகளின் மத்தியில் நாம் சந்தோஷமாக வாழக் கூடியவர்களாக காணப்படுவோம். தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பாடுகள், உபத்திரவங்கள் இருந்தாலும், அவைகளின் மத்தியில் தேவன் ஒரு நோக்கத்தோடு அனைத்தையும் வழிநடத்துகிறார். ஆகவேதான் சங்கீதக்காரன், “நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” என்று சொல்லுகிறார். இதனை ஆங்கிலத்தில் இன்னும் ஆழமாக ‘பாதுகாக்கிறீர்’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆண்டவருக்குள்ளான பாதுகாப்புப் போன்று, வேறு எது நமக்கு உண்மையான பாதுகாப்பாக இருக்க முடியும்? தேவன் நம்முடைய பாதுகாவலராக இருப்பாரானால் அது நமக்கு மெய்யான பாதுகாப்பாக இருக்க முடியும். ஆகவே நம் வாழ்க்கையில் எவ்விதமான பாதுகாப்பை நம்பி வாழ்கிறோம் என்பது மிக அவசியமானது. கர்த்தர் நம் பாதுகாவலராக இல்லையென்றால், யாரை நம்முடைய பாதுகாவலராகக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். நாம் வாழும் வாழ்க்கை முறையானது தேவனுக்கு பிரியமானதாக இருக்க வேண்டும். அது நிலைவரமானது. நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமாக நாம் ஆண்டவரை சார்ந்து வாழும் பொழுது, அவருடைய நாமத்தை நேசிக்கவும், அவருடைய நாமத்தை நேசிக்கிற நமக்கு இந்த உலகத்தில் பாடுகள் எது இருந்தாலும், அது நம்மை அவருடைய அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. ‘உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக’.
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக என்பது இன்ப துன்ப எல்லா வேலைகளிலும் நாம் கொண்டிருக்கும் கர்த்தருக்குள்ளான சந்தோசத்தோடு கூடிய ஆர்ப்பரிப்பைக் குறிக்கிறதாக இருக்கிறது.