“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14).
நாம் தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும் மேலான பெயர் நமக்கு வழங்கப்பட முடியுமா? நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி அவருடைய முகத்தைத் தேட வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இவ்விதமாய் நாம் செய்யும்போது ஆண்டவர் சொல்லுகிறார், அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்று. நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவது மிக அவசியமானது. தேவனுக்கும் நமக்கும் சரியான தொடர்பு இருப்பது அவசியம். அவருக்கு முன்பாகத் தாழ்த்துகிற ஒவ்வொருவரும் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நாம் ஆசீர்வதிக்கப்பட நம்முடைய பாவங்களே தடையாக இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அது நமக்கும் அவருக்கும் பிரிவினையை உண்டாக்குகிறது. ஆனால் நாம் அவைகளை அறிக்கையிட்டு விட்டுவிட்டால், தேவன் நமக்கு அதை மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராய் இருக்கிறார். இந்த தேவனை நாம் முழு இருதயத்தோடு சார்ந்து அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோமாக. அப்பொழுது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக மேலான காரியங்களைச் செய்து நமக்கு க்ஷேமத்தைக் கொடுத்து, இந்த உலகத்தில் அவருடைய பிள்ளைகளாக நம்மை வழிநடத்துவார்.