பிப்ரவரி 1
“தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9).
என்னுடைய வாழ்க்கையில் நான் தேவனுடைய அன்பை எவ்விதம் காணக்கூடும்? நம்முடைய வாழ்க்கையில் மெய்யாலுமே பாவத்தின் கொடுமை, ஆவிக்குரிய மரணம் என்பது ஆட்சிசெய்து, நம்மை அழித்துக்கொண்டிருந்த இந்த நிலையில் நாம் பிழைக்கும்படிக்கு தேவன் தாமே தம்முடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார் என்பதை நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே நாம் ஜீவனுள்ளவர்களாய் தேவனுடைய அன்பை ஒவ்வொரு நாளும் ருசிக்கிறவர்களாய் அந்த அன்பில் நிலைத்திருக்கிற ஒரு அருமையான வாழ்க்கைகுள்ளாக தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இவ்விதமான பாவத்தின் ஆளுகை நமக்கு வேதனையையும் சஞ்சலத்தையும் வருத்ததையும் கொடுத்ததை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள் மெய்யாய்ப் பிழைத்திருக்கதக்கதாக ஜீவனுள்ளவர்களாக வாழும்படிக்கு தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினதின் மூலமாக தம்முடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன ஒரு மேலான அன்பு! நாம் இந்த அன்பை விலைமதிக்கவும், இந்த அன்பை உணர்ந்து அதின் அடிப்படையில் வாழுகிற ஒரு அருமையான வாழ்க்கையை நாம் கொண்டிருக்கவும் தேவன் நம்மை அழைக்கிறார். இந்த உலகத்தில் மிகப் பெரிய அன்பு இதுவே! நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் தேவனுடைய அன்பைச் சார்ந்து வாழுகிறோம். என்னை அழைத்த தேவன் இந்த அன்பின் மூலமாக என்னை விடுவித்துக் காத்து பெலப்படுத்தி வருகிறார் என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சாட்சியாய் அமைந்திருக்கிறது. என்ன ஒரு மகிமையான அன்பு!