மே 11           

“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்” (ரோமர் 8:16).

ஒரு கிறிஸ்தவனின் மிகப்பெரிய சிலாக்கியத்தை இந்த இடத்தில் பார்க்கிறோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் பொழுது, தேவ ஆவியானவர் அவனில் வந்து வாசம் பண்ணுகிறார். அவனுடைய இருதயம் தேவனுடைய ஆலயமாக மாற்றப்படுகிறது. ஒரு காலத்தில் கள்ளர் குகையாக இருந்த இருதயம், தேவன் வாசம் பண்ணும்படியான ஒரு ஸ்தலமாக மாற்றப்படுகிறது. இது எவ்வளவு பெரிய காரியம். அதோடுகூட நம்முடைய வாழ்க்கையில் தேவ ஆவியானவர் இரண்டு விதங்களில் நம்முடன் சாட்சியளிக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் ஆண்டவருடைய பிள்ளைகளாக இருப்பதின் மேன்மையை உணர்ந்து வாழுகிற ஒரு உன்னதமான வாழ்க்கையைக் குறித்த உணர்வோடு நாம் வாழ நம்மை வழிநடத்துகிறார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பேச்சும், நடத்தையும், செயலும் காணப்படும்படி நம்மை ஆண்டு வழிநடத்துகிறார்.

இன்னொரு விதத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம்பண்ணி, நம் வாழ்க்கையில் நாம் தவறுகள், பாவங்கள் செய்யும் பொழுது, அதைச்  சுட்டிக்காட்டி நம்மை வழிநடத்துகிறார். பாவ  சிந்தனை நம்மில் வரும்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைக்குறித்து எச்சரித்து நம்மை வழிநடத்துகிறார். மேலும் அதை நாம் செய்வதற்கு முன்பாகவே நம்மை உணர்த்தி, தடுத்தாட்கொள்ளுகிறார். ஒவ்வொரு பாவத்தினின்றும்  நாம் விலகி இருக்க நம்மை வழி நடத்துகிறார். ஒருவேளை நாம் பாவம் செய்தாலும், நம்முடைய இருதயத்தில் அதைக் குறித்து நாம் குத்தப்பட்டு மனவருத்தத்தோடு, ஆண்டவரிடத்தில் மன்னிப்புக்  கேட்க நம்மை வழி நடத்துகிறார். மற்றொன்று நாம் இந்த உலகத்தில் உலக மனிதர்களை போல் அல்ல. நாம் அவருடைய பிள்ளைகள். அவருடைய மகிமைகரமான வழிகளில் நடக்கும் படியாக நியமிக்கப்பட்டவர்கள். நம்முடைய வாழ்க்கையின் முடிவு இந்த உலகம் அல்ல. நம் முடிவு பரலோக ராஜ்யம் என்ற உணர்வு நம்மில் காணப்படும். நாம் தேவ ஆவியினால் உந்தப்பட்டு வழிநடத்தப்படுகிற வாழ்க்கை என்பது உன்னதமான ஒரு சிலாக்கியமாகும். எல்லோருக்கும் தேவன் இவ்விதமான வாழ்க்கையைத் தருவதில்லை.நமக்கோ இதை இலவசமான ஈவாவாகக் கொடுத்திருக்கிறார்.