கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் :17                           தேவனுடைய கிருபை                  ரோமர். 5 : 1 – 21

‘ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது..’ (ரோமர். 5 : 15).

இந்த வசனத்தின்  மூலமாக பாவத்தின் வலிமையைக் காட்டிலும் கிருபையின் வலிமை எவ்வளவு பெரியதென்று பாருங்கள். பாவம் ஒரு மனிதனை மீளமுடியாத படுகுழியில் தள்ளிற்று. பாவம் அவனை அடிமையாக்கிற்று. பாவஞ்செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். (யோவான் 8 : 34 ). இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அடிமையாகவே பிறக்கிறான். ஆகவேதான் அவன் எஜமானாகிய பாவத்திற்கு  அவன் வாழ்நாள் முழுவதும் பணிசெய்கிறான். முதன் முதலில் பாவத்தில் விழுந்துபோன ஆதாமை நோக்கிப்பார்போமானால் பாவத்தின் கொடுமையை விளங்கிக்கொள்ளமுடியும். அவன் கீழ்படியாமல் பாவம் செய்தபோது தேவனோடு கொண்டிருந்த மகிமைகரமான ஐக்கியத்தை இழந்தான். பாவம் அவனை வெட்கத்துக்குரியவனாய் ஆக்கிற்று. ஆதாமும் ஏவாளும் தங்களுக்குள் இருந்த தேவ ஐக்கியத்தையும் இழந்தார்கள்.

பாவத்தின் கொடுமையைப் பாருங்கள். அதின் கொடுமை அன்றோடு நின்றுவிடவில்லை, இன்றும் அதன் ஆளுகை மனிதனை கொடியவனாக்கிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது. சுபாவங்களில் அவன் கொடியவனாய் தன்னை வெளிப்படுத்துகிறான். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனின் நிலையும் இதுவே.

இவ்விதமான சீரழிந்த மனிதனை தேவன் தேடி இரட்சிப்பதுதான் கிருபை. பாவத்தின் அடிமை என்ற பெயருடைய அவனை தேவனின் பிள்ளையென்று மாற்றுவதே கிருபை. அவனுடைய பாவத்தின் தண்டனையை பரிசுத்தமான தேவகுமாரன் சுமந்து, அந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிப்பதுதான் கிருபை. இன்றும் அவனை பாவத்தின் அடிமை தனத்திலிருந்து தேவன் விடுவிப்பது கிருபை. அவனை ஆற்றி தேற்றி வழிநடத்தி செல்ல பரிசுத்த ஆவியானவர் அவனில் வாசம்பண்ணி செயல்படுகிறாரே அதுதான் கிருபை. பாவத்திலிருந்த மனிதனை கிறிஸ்துவோடு உயிர்பித்து உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரச்செய்கிறதுதான் கிருபை. கிருபையின் வலிமை எவ்வளவு பெரியதென்று பாருங்கள்!