கிருபை சத்திய தினதியானம் 

ஏப்ரல் 12                      தேவபக்தியுள்ள சந்ததி           எரேமியா 19:1–15

     ‘தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத்

தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும்

இப்படி வரப்பண்ணுவேன்’ (எரேமியா 19:5).

      எரேமியா தீர்க்கத்தரிசி இஸ்ரவேல் மக்களின் உண்மை நிலையை இந்த இடத்தில் சித்தரித்துக் காண்பிக்கிறார். இஸ்ரவேல் மக்கள் தங்கள் பிள்ளைகளை தேவனுக்கென்று வளர்க்காமல் உலகத்திற்கென்றும் பிசாசுக்கென்றும் வளர்த்தார்கள். அருமையானவர்களே! உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் கர்த்தருக்கேற்ற பயத்திலும் ஞானத்திலும் வளர்க்கத் தவறும்பொழுது, அவர்களை இருளின் பயங்கரத்திற்கு வளர்க்கிற மதியீனமான பெற்றோர்களாகக் காணப்படுவீர்கள். இது மிகவும் கர்த்தருக்கு அருவறுப்பானது. தங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கென்று வளர்க்காதப் பெற்றோர்கள் பெரும் பாதகத்திற்கு உள்ளானவர்கள்.

       ‘அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது’ (சங்கீதம் 106:37–38). கர்த்தர் உங்களுக்கென்று கொடுத்திருக்கின்ற பிள்ளைகளை, நீங்கள் அவருக்கென்று ஆதாயப்படுத்தும்படியாகவே கொடுத்திருக்கிறார். அவர்களை கர்த்தருக்கேற்ற பயத்தில் வளர்ப்பது உங்களுடைய உத்திரவாதம். ஆகவேதான் வேதம்: ‘அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே’ (மல்கியா 2:15) என்று சொல்லுகிறது.

      நீங்கள் உங்கள் பிள்ளைகளை தேவனுக்கென்று வளர்க்கத் தவறும்பொழுது அவர்களுடைய குற்றமில்லாத இரத்தம் சிந்துவதற்கு நீங்கள் காரணர்களாக இருப்பீர்கள். மேலும் அவர்கள் நியாயத் தீர்ப்பிலே உங்களுக்கு எதிராக குற்றம் சாட்டவும் செய்வார்கள். உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கின்றீர்கள்? கர்த்தருக்கேற்ற பயம் அவர்களிடத்தில் காணப்படுகின்றதா? உங்கள் பிள்ளைகளை இந்த வசனத்தின்படி வளர்க்கின்றீர்களா? (உபாகமம் 6:4–9). அவ்வாறு இல்லையெனில் காலம் தாமதிக்காமல் உங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய சமுகத்தில் குடும்பமாக மன்றாடுங்கள். தேவன் இரங்குவார்.