கிருபை சத்திய தின தியானம்

      பிப்ரவரி 14                  தேவனுடைய சித்தம்         1யோவான் 2:15-29

      ‘தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ

என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்’ (1யோவான் 2:17).

      தேவனுடைய சித்தம் என்பது என்ன? தேவன் எனக்கென்று கொண்டிருக்கிற திட்டம், நோக்கம், வாழ்க்கையின் வழிமுறைதான். அன்பானவர்களே, கர்த்தர் நல்லவர் என்பதை வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே எனக்கென்று அவர் கொண்டிருக்கிற திட்டம், சித்தம் நன்மையானதாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மனிதன் வீழ்ந்துபோன பாவ சுபாவத்தினால் எப்பொழுதும் தன்னுடைய சித்தத்தை செய்யவே வாஞ்சிக்கிறான். அதினிமித்தம் அநேக தேவையற்ற பிரச்சனைகள் மூலமாக அநேக காரியங்களின் ஊடாக அவன் சிக்கிக்கொண்டு தவிக்கிறான். அவனுடைய வாழ்க்கையில் கர்த்தர் கொண்டிருக்கிற நோக்கத்தை இழந்து போய்விடுகிறான். ஆனால் தேவனுடைய சித்தம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நன்மையானது மட்டுமல்ல, அதுவே சிறந்த ஈவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

      சங்கீதம் 143:10 -ல் ‘உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக’ என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். கர்த்தருக்குப் பிரியமானது நமக்கு நன்மையானது. அது நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்றது. ஆகவே நாம் எப்பொழுதும் நம்முடைய சுய சித்தத்தை செய்வதை விட்டுவிட்டு, தேவனுடைய சித்தத்தை செய்வதை வாஞ்சிக்கக் கூடிய ஆவிக்குரிய நிலைக்கு வருவதும், அதற்கு பொருந்திக் கொள்ளுவதுமே நம் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த காரியமாய் காணப்படுகிறது.

     சங்கீதக்காரன் சொல்லுகிற வண்ணமாக ‘உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக’ என்பது எவ்வளவு நல்லது என்பதை ருசித்துப் பாருங்கள். தேவன் நம்மை நடத்துவது எப்பொழுதும் செம்மையான வழியே. மனிதன் எப்பொழுதும் தாறுமாறான வழியைக் கொண்டிருக்கிறவனாகவே இருக்கிறான். அருமையான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாக காணப்படுகிறதா? அது தேவனுடைய சித்தம் தானா? ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை செய்ய முழுமனதுடன் வாஞ்சிக்கும் பொழுது, தேவன் அந்த வாஞ்சையை ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.