கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 14                          தேவ சித்த ஜெபம்              1 யோவான் 5:1 –14

“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால்

அவர் நமக்குச் செவிக்கொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி

நாம் கொண்டிருக்கிற தைரியம்” (1 யோவான் 5 : 14)

   ஜெபம் என்பது, ஒரு கிறிஸ்தவனுக்கு அதி முக்கியமான  ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது. ஜெபவாழ்க்கையில் வளராமல் மெய்யான கிறிஸ்தவ ஜீவியத்தைக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு தொடர்ச்சியான ஜெபவாழ்க்கை உண்டா? தனி ஜெப பழக்கம் உண்டா? யோசித்துப்பாருங்கள். தனிஜெபத்திலும் தேவனுடைய ஆலயத்தில் ஜெபிப்பதிலும் வளருங்கள்.

    ஜெபமும் தேவனுடைய சித்தமும் பிரிக்கப்படாத ஒன்று. தெவனுடைய சித்தத்தின்படி நாம் கேட்கும்போது, ஜெபிக்கும்போது, தேவன் அதற்கு செவிக்கொடுக்கிறார். இந்த சத்தியம் எவ்வளவு ஆழமான உறுதியை ஜெபிப்பதற்குக் கொடுக்கிறது பாருங்கள்! ஒரு மெய் கிறிஸ்தவன் தேவனுடைய சித்தத்தையே அதிகம் நேசிப்பவன். தன்னுடைய சித்தத்தை அல்ல. மனிதனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழிகளுண்டு ஆனால் அதனுடைய முடிவு மரண வழிகள். ஆகவே அவன் எப்போதும் தன்னில், தன்னுடைய  வாழ்க்கையில், தன்னுடைய குடும்ப வாழ்வில், தன் சபை மற்றும் எதுவாக இருந்தாலும் அதில் தேவனுடைய சித்தமே நிறைவேற வேண்டும் என்று வாஞ்சிப்பான். அவன் சங்கீதக்காரனைப்போல உம்முடைய சித்தத்தையே செய்யப் பிரியமாயிருக்கிறேன்’ (சங் 40 : 8 ). என்று சொல்லக்கூடியவனாக காணப்படுவான்.

    இவ்விதமாக தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அதையே நேசிக்கிறவர்களளின், ஜெபத்திற்கு தேவன் செவிக்கொடுப்பாரோ, இல்லையோ என்ற அச்சம் தேவையில்லை. ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையில் சொல்லியபடி அவருடைய சித்தமாயிருந்தால் அதை நிச்சயம் செய்வார் என்ற உறுதிபாடு இருக்கும். ஆகவே இவ்விதமான தேவனுடைய வாக்குத்தத்தம், ஜெபத்தில் நம்பிக்கையோடு தேவனிடத்தில் கிட்டிச்சேரவும் அவர்களுக்கு உறுதியாயிருக்கிறது. அன்பானவரே! உன்னுடைய ஜெபவாழ்க்கை எப்படி இருக்கிறது? ஜெபத்தை வாஞ்சி.