ஜூலை 3  

“தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பகளின் தலைகளை உடைத்தீர்” (சங்கீதம் 74:13).

      சமுத்திரம் இரண்டாக பிளாக்கப்பட்டதை எப்பொழுதாகிலும் நீங்கள் கேள்விப்பட்டிருகிறீர்களா? எந்த விஞ்ஞானியாவது, விஞ்ஞானமாவது அவ்விதம் செய்யக்கூடுமா? இல்லை. தேவன் மாத்திரமே செய்யக்கூடிய காரியங்கள் இவை. தேவன் மாத்திரமே செய்யும்படியான காரியங்கள் உண்டு என்பதும், அவர் தேவன் என்றும், மனிதன், மனிதன்தான் என்று நம்மை உணரச் செய்கிறது. நாசியில் சுவாசமுள்ள மனிதனுக்கு தேவன் எல்லையை வைத்திருக்கிறார்.

      தேவன் தம்முடைய மக்களுக்காகச் செய்யும் காரியங்கள் மிகவும் ஆச்சரியப் படத்தக்கவைகள். “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. அவருடைய செயல் மகிமையும் மகத்துவம்முள்ளது, ஜாதிகளின் சுதந்திரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்” (சங்கீதம் 111:2, 3, 6). நீ தேவனுடைய பிள்ளையானால், தேவன் மகிமையும் மகத்துவமுமான காரியங்களையும் உனக்காகச் செய்வார். இதை மெய்யாலும் விசுவாசிக்கிறாயா? தேவன் தம்முடைய செயல்களில் மகத்துவமுள்ளவர். இஸ்ரவேல் மக்கள் சிவந்த சமுத்திரத்தின் முன்பாக நின்றபொழுது என்ன நினைத்திருப்பார்கள்? அவர்களின் பின்பாக எகிப்தியர் துரத்தி வருகிறார்கள், முன்பாக சிவந்த சமுத்திரம். இதுவரை சமுத்திரத்தை தேவன் இரண்டாக பிளந்தார் என்பதை இஸ்ரவேல் மக்கள் கேட்டதில்லை, பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையில் இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தார்கள். ஆனாலும் தேவன் இரக்கமுள்ளவராய் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினார்.

      உன்னுடைய வாழ்க்கையிலும் சிவந்த சமுத்திரத்தைப்போன்ற பெரிதான பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கலாம். ஆனாலும் விசுவாசத்தோடே நிற்பாயானால், தேவன் உன்பட்சத்தில் நின்று செயல்படுவதை நீ பார்க்கமுடியும். இஸ்ரவேல் மக்களுக்கு சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்து வழி உண்டாக்கின தேவன் உனக்கும் வழியைத் திறப்பார்.