கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 30                                                     தேவனின் காயம்                                     யோபு 5 : 17 – 27

அவர்  காயப்படுத்தி காயங்கட்டுகிறார்; அவருடைய கை ஆற்றுகிறது.’ (யோபு 5 : 18)

            கஷ்டங்கள் துன்பங்கள் வந்தால் அவைகள் தேவனிடத்திலிருந்து அல்ல, மனிதர்கள், சூழ்நிலைகள் பிசாசுகளிடமிருந்துதான்  வரும் என்று அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் வேதத்தின்படி சரியா? இல்லை. மேலே சொல்லப்பட்டவைகள் நமக்கு கொடுக்கப்படும் துன்பங்களுக்கு கருவியாக உபயோகப்படுத்தபடுகிறவைகளேயல்லாமல் வேறல்ல. பிசாசும்கூட தேவனுடைய அனுமதி பெற்றுதான் செயல்படமுடியும். முக்கியமாக தேவனுடைய பிள்ளைகளை பிசாசு ஒருபோதும் கர்த்தருடைய அனுமதியில்லாமல் தாக்க முடியாது. யோபுவின் வாழ்க்கையில் அதைதான் பார்க்கிறோம். யோபை பிசாசு தாக்கினான் உண்மைதான். ஆனால் தேவனுடைய அனுமதி பெற்றுதான் தாக்கினான். தேவனே சகலத்தையும் ஆளுகிறவர், சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவன் அவரே. அவர் சித்தம், அனுமதியில்லாமல் இந்த உலகில் ஒரு இம்மியும் அசையாது என்பதே உண்மை.

            சரி தேவன், ஏன் நம்மைக் காயப்படுத்தவேண்டும்? தேவன் உலகமக்களை நியாயந்தீர்க்கும்போது ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார். ஆனால் தேவனுடைய பிள்ளைகளை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை. அவர்களின் நன்மைக்காக, சுத்திகரிப்புக்காகச் சிட்சிக்கிறார். அதாவது காயப்படுத்துகிறார். ஆனால்  காயப்படுத்தி , நம்மைக் காயத்தோடு மரித்துப்போகட்டும் என்று விட்டுவிடுவாரா? இல்லை, காயப்படுத்தின அதே தேவன் காயத்தையும் கட்டுகிறார். காயத்தை ஆற்றுகிறார், குணப்படுத்துகிறார். ஆகவே உன்னுடைய காயத்தினால் சோர்ந்துப்போகாதே. ஆனால் ஏன் தேவன் எனக்கு காயத்தை அனுமதித்துருக்கிறார். ஏன் என்னைக் காயப்படுத்தினார். என்று தேவனிடத்தில் கேட்கலாம். காரணமில்லாமல் அவர் நம்மை காயப்படுத்துகிறவர் அல்ல. தேவ ஆவியானவர் உன் பாவத்தை உணர்த்துவாரானால் மனந்திரும்பு. அதற்காக வருத்தப்பட்டு தேவனிடத்தில் ஜெபி. தேவன் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார் என்று பார்க்கிறோம்.

            ’இருதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.’ (சங் 147 : 3).