“வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்” (சங்கீதம் 78:15).

      இந்த தேவன் சர்வ சிருஷ்டியையும் ஆண்டு வழிநடத்துகிறவர். வனாந்தரத்தில் கன்மலைகளைப் பிளந்து தண்ணீரைக் குடிக்க கொடுப்பவர். அவர் வனாந்தரமான சூழ்நிலையை மாற்றி, வறண்டு போன இடத்தில் தண்ணீரை சுரக்கப்பண்ணுகிறவர். உங்களுடைய வாழ்க்கை வறட்சியாக இருக்குமானால் தேவனைச் சார்ந்து அவருடைய வார்த்தையைச் சார்ந்துகொள்ளுங்கள். “கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று” (சங்கீதம் 105:41) என்று வேதம் சொல்லுகிறது. உங்களுடைய வறட்சியான வாழ்க்கையில் தேவனுடைய ஆறு புறப்பட்டு வரும். “அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்” (சங்கீதம் 114:8). அநேக சமயங்களில் நாம் நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலை மாற்றங்களில் தேவனுடைய வார்த்தையைச் சார்ந்துகொள்ளத் தவறுகிறோம். அவர் வார்த்தையை சார்ந்துகொள்ளும்பொழுது நம்முடைய வாழ்க்கையின் எதிர்மாறான காரியங்களை மாற்றுவார். 

      நாம் ஏன் வறண்ட நிலங்களை போலத் தவிக்கிறவர்களாய்க் காணப்படவேண்டும்? “உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி, வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்” (ஏசாயா 41:18) என்று வேதம் சொல்லுகிறது. இந்த வேதத்தில் தேவனுடைய மகத்துவமான ஆளுகையையும், வல்லமையான கிரியையும் பார்க்கலாம். தேவன் சகலத்திலும் அதிகாரம் கொண்டவராக, இல்லாமையிலிருந்து மிகப்பெரிய காரியங்களைச் செய்கிறவராக இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் சகலத்தையும் ஆளுகிற தேவனாக இருக்கிறார். அவரை நம்பியிருக்கிற ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள். “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி 22:17) என்று வேதம் சொல்லுகிறது. இலவசமான தேவனுடைய வார்த்தையும் இரட்சிப்பும் நமக்கு நெருக்கமாக இருக்கிறது. அதை நாம் பிடித்துக்கொள்வோம். தேவன் நம் வாழ்க்கையைச் சீர்படுத்தி நிலைநிறுத்துவார்.