மார்ச் 10    

“நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்”

(ஆகாய் 2:5).

      இஸ்ரவேல் மக்கள் பாபிலோன் தேசத்திலிருந்து திரும்பி வந்து ஆலயத்தைக் கட்டும்படியாக எழும்பின பொழுது, அநேக தடைகள் எழும்பியது. ஆலயம் கட்டப்படுவது நிறுத்தப்பட்டது. அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசி போன்றவர்கள் எழும்பி தேவனுடைய ஜனங்களை உற்சாகப்படுத்தினார்கள். தேவனுடைய பணியில் நாம் ஒருபோதும் தோய்ந்து போகக்கூடாது. பல தடைகள் நேரிடலாம். ஆண்டவருக்குக்கென்று வாழும்படியான காரியங்களில் பல சோதனைகள் எழும்பலாம். ஆனாலும் நம்முடைய தேவன் உடன்படிக்கையின் தேவன்.

      நம் இரட்சகர் நம்மைப் பாதுகாக்கவும், வழி நடத்தவும், நமக்குக்கென்று வைத்திருக்கும் பணியை நிறைவேற்றவும் அவர் வல்லவராக இருக்கிறார். நமக்குப் போதுமான கிருபையைக் கொடுக்கவும் உண்மையுள்ளவர். ஆகவேதான் ‘நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்’ என்று சொல்லுகிறார். தேவ ஆவியானவர் நம் பட்சத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி நமக்கு உதவி செய்வார். பயப்படாதிருங்கள் என்று தேவன் சொல்லுகிறார். பயமுள்ள ஆவியை தேவன் நமக்கு கொடுக்கவில்லை.

      அநேக சமயங்களில் நாம் ஆண்டவருடைய காரியங்களைச் செய்யும் பொழுது  பயப்படுகிறோம். அதைக் குறித்து ஒருவேளை பலவிதமான அச்சங்களைக் கொண்டு நாம் வாழ்கிறோம். ஆனால் தேவன் பயப்படாதேயுங்கள் என்கிறார். “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்” (யோசுவா 8:1) என்று சொல்லுகிறார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நம்மை அவருடைய பணிக்குக்கென்று அழைப்பது மாத்திரமல்ல, முற்றும் முடிய அதற்குரிய காரியங்களைக் கொடுக்கிறார். ஆகவே நமக்கு உடன்படிக்கையின் தேவன் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.