“தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (பிரசங்கி 5:19).

இந்த உலகத்தில் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் பெற்றவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடே அதை அனுபவிக்கிறார்கள் என்று நாம் சொல்ல முடியுமா? இல்லை. அவர்கள் பெற்றிருக்கும் ஐஸ்வரியமும் சம்பத்தும் அநேக வேளைகளில் அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடியதாய் இருக்கின்றது. அநேக வேளைகளில் தாங்கள் விரும்பினதைச் சாப்பிடக் கூடாதபடிக்கு அவர்களில் சரீர வியாதியும் தடையாக இருக்கிறது. மேலும் பொறமைகளும் பெருமைகளும் அவர்களின் சமாதனத்தை இழக்கச் செய்கிறதாய் இருக்கின்றது. பல வேளைகளில் ஐஸ்வரியம் நமக்குச் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை அல்ல. ஆனால் தேவன் சொல்லுகிறார், “அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” நாம் நம்முடைய வாழ்க்கையில் ஐஸ்வரியமும் சம்பத்தும் பெற்றிருப்பது ஒன்று. ஆனால் அதை அனுபவிக்கக்கூடிய உண்மையான ஒத்தாசையும் நன்மையும் கர்த்தர் மட்டுமே நமக்குக் கொடுக்க முடியும். அவர் நமக்கு அதைக் கொடுக்காவிட்டால் நாம் பெற்றிருக்கும் நன்மைகளும் நமக்குச் சந்தோஷமாக இருக்காது. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் பெற்றிருக்கிற ஐஸ்வரியம் அது தேவன் அவர்களுக்குக் கொடுக்கிறபடியால், அவர்கள் அதை அனுபவிக்கக்கூடிய சிலாகியத்தை தேவன் தந்து அவர்களை ஆசீர்வதிக்கின்றார். இந்த உலகத்தில் நாம் பெற்றிருப்பது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் என்று என்ன வேண்டாம். அவைகளை தேவன் ஆசீர்வதித்து நமக்குக் கொடுப்பதின் மூலமாக மாத்திரமே, அவைகளில் நாம் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தேவன் தம்முடைய மக்களுக்கு எல்லாவற்றிலும் இவ்விதமான சிலாக்கியங்களைக் கொடுத்து, அவர்கள் பெற்றிருக்கும் காரியங்களைச் சந்தோஷத்தோடே அனுபவிக்க உதவி செய்கின்றார்.