கிருபை சத்திய தின தியானம்

      பிப்ரவரி 12             மனம் மாறா கர்த்தர்             1சாமு 15:29-35

      ‘மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான்’ (1சாமு 15:29).

      அநேகர் தேவாதி தேவனாகிய கர்த்தரை மனுஷரைப் போல எண்ணிவிடுகிறார்கள். அருமையானவர்களே! நீ உன் இருதயத்தில் கர்த்தரைக் குறித்து எவ்விதம் சிந்தனைக் கொண்டுள்ளாய்? வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ ஏகாதிபத்தியம் உடைய தேவன் அவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சகலமும் கூடும். ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?’ (எண் 23:19) என்று வேதம் சொல்லுகிறது.

அநேக சமயங்களில் நாம் நம்முடைய சுய அறிவினால் கர்த்தரை எண்ணிவிடுகிறோம். அது தவறு. நாம் எப்பொழுதும் வேதம் சொல்லும் வண்ணமாக அவரைப் பற்றிக் கொள்ளுவோம். அது நம் ஆத்துமாவுக்கு நல்லது. ஏனென்று கேட்டால், ‘கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை;’ (எசே 24:14) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தர் ஒன்றை சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் போகிறவர் அல்ல. ஆகவே நாம் அவரை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு விசுவாசிப்போம். அவருடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்ளுவோம். நிச்சயமாக நம் வாழ்க்கையில் அவர் பெரிய காரியங்களைச் செய்வார். ‘அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;’ (உபா 33:27).

      உன்னுடைய வாழ்க்கையில் மாறாத கர்த்தர் அவருடைய புயம், அவருடைய பெலம், அவருடைய ஞானம், அவருடைய வல்லமை, அவருடைய கிருபை உனக்கு ஆதாரமாகவும், அஸ்திபாரமாகவும் இருக்கிறது. அவரை சார்ந்துகொள். நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் கட்டப்படும் வீடு போல இருக்கும். உன் வாழ்விலும் அவர் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை விசுவாசி. கர்த்தர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை செய்கிறவர் (யோபு 9:10). உன் வாழ்கையை கட்டுவார். உன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்பாக ஒரு சாட்சியுள்ள, பிரகாசமான வாழ்க்கையாக மாற்றுவார்.