கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 5                            கர்த்தர் என் பெலன்                        ஆபகூக் 3:1-19

“ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” (ஆபகூக் 3:19)

     கர்த்தர் உன் வாழ்க்கையில் பெலனாக இருக்கிறாரா? இது நம்முடைய வாழ்க்கையில் மிக ஆழமாய் சிந்திக்க வேண்டிய காரியம். உன்னுடைய வாழ்க்கையில் எதை நீ பெலனாக கொண்டுள்ளாய்? உன்னுடைய பணத்தையா, படிப்பையா, அறிவையா, ஞானத்தையா அல்லது வேறெதை நீ பலமாக கொண்டிருக்கின்றாய்? என்பதை சிந்தித்துப்பார். கர்த்தர் மாத்திரமே உன் பெலனாக கொண்டிருக்க வேண்டும்.

      ஆபகூக் தீர்க்கதரிசி ஆபகூக் 3:17 –ல் எல்லாவிதமான எதிர்மறையான சூழ்நிலையிலும், மகிழ்ச்சியாய் இருப்பேன் என்று சொல்லுவதை நாம் பார்க்கிறோம். நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் எப்பொழுதும் மாறலாம். உயர்வானாலும் தாழ்வானாலும் கர்த்தர் உன் பெலனாக இருப்பாரானால், நீ எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாய் வாழமுடியும். சங்கீதக்காரனும் கூட “என் பெலனாகிய கர்த்தாவே” (சங் 18:1) என்று சொல்லுகிறார். ஆகவே கர்த்தரை மாத்திரமே பெலனாக கொண்டிருக்கும் வாழ்க்கையை நீ கொண்டிருக்க வேண்டும். மேலும் “கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்” (சங் 27:1) என்று சொல்லுகிறார். ஆகவே நாம் ஜீவிக்கிற இந்த வாழ்க்கையில் கர்த்தர் நம்முடைய பெலன்.

     ஏசாயா தீர்க்கதரிசி “கர்த்தராகிய யேகோவா என் பெலனும்” (ஏசாயா 12:2) என்று சொல்லுகிறார். ஆகவே தேவனுடைய ஜனங்கள் கர்த்தரையே  தன் பெலனாக கொண்டிருந்ததினால், அவர்கள் தங்களுடைய விசுவாச வாழ்க்கையில் பெலப்பட்டு வாழ முடிந்ததது. பவுல் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான முள்ளின் சோதனையின் மத்தியில், கர்த்தர் அவருக்கு என்ன சொன்னார். “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி 12:9). ஆகவே நாம் நம்முடைய பெலவீனத்தில் தளர்ந்து போகக்கூடாது. நாம் பெலனை பெற்றுக் கொள்ளும்படியாக கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். அவரே நம்முடைய பெலானகக் கொண்டு நாம் வாழ வேண்டும். அப்பொழுது கர்த்தருடைய பெலம் நம்மை தாங்குவதை காணமுடியும்.