மே 5             

“துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதிமொழிகள் 15:29).

தேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்று வேதம் முழுவதுமாக நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக்  கேட்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு பதில் அளிக்கிறார். அவர்களை அவரே நீதிமான்களாக்குகிறார். பாவிகளாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில், அவருடைய கிருபையினிமித்தமாக தாம்  சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக தம்முடைய பிள்ளைகளாக  மாற்றுகிறார். அவர்களுக்கு எவ்விதம் அவர் செவிகொடாமல் இருப்பார்? “செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்” (நீதி 15:8). தேவன் ஜெபத்தைக்  கேட்கிறவர் மாத்திரமல்ல, அதன் பேரில் அவர் பிரியமுள்ளவராக இருக்கிறார். அவர் அதை அக்கறையோடுக்  கேட்டு, அதற்கு பதில் அளிக்க கூடிய விதத்தில் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். அப்படியானால் நாம் நம்பிக்கையோடு கூட தேவனிடத்தில் ஜெபிப்போமாக. நிச்சயமாக நமக்கு பதில் அளிப்பார் என்பதில்  உறுதியாக இருக்க முடியும்.

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” (சங்கீதம் 134:15) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நீதிமான்களின் பேரில் அவருடைய பார்வை நோக்கமாக இருந்து அவர்களை வழிநடத்தவும், அவர்களுக்கு உதவவும் ஆண்டவர் எப்பொழுதும் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். அது மாத்திரமல்ல அவருடைய செவிகள் அவர்களுக்கு  திறந்திருக்கிறது என்பது ஒரு உன்னதமான நம்பிக்கைக்குரிய காரியமாக இருக்கிறது. “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங்கீதம் 145:18). அவர்களுடைய விருப்பத்தின்படி செய்து அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு அவர் இரட்சிக்கிறார் என்று பார்க்கிறோம். வாழ்க்கையில் நீங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடும் பொழுது உங்களுக்குச்  செவிகொடுத்து அவர் உங்களை இரட்சிப்பார் என்பதில் நம்பிக்கையாக வாழ முடியும்.