ஜனவரி 5

“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8).

தேவாதி தேவன் ஒருக்காலும் மாறுவதில்லை. அவருடைய திட்டங்களும் நோக்கங்களும் ஒருக்காலும் மாற்றப்படுவதுமில்லை. “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங்கீதம் 90:2). நம்முடைய தேவன் நித்தியமான தேவன். நம்முடைய வாழ்க்கையில் அவர் நித்தியத்தின் நோக்கத்தோடு செயல்படுகிறவராய் இருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையின் தற்காலச் சோதனைகள் நெருக்கங்களினாலும், வருத்தத்தோடும், வேதனையோடும் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. தேவன் நம்மை ஒரு நித்தியமான நோக்கத்தோடு உருவாக்கியிருக்கிறபடியால், தற்காலத்துச் சோதனைகள் நம்மைச் சோர்ந்துபோகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. “நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை” (சங்கீதம் 102:27). ஆகவே இந்த தேவன் ஒருக்காலும் மாறாதவர். அவர் மாறாதவராய் இருக்கிற படியால், அவருடைய வாக்குத்தத்தங்கள், அவருடைய அன்பு, கிருபை, இரக்கம் மாறுவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் மாறாத இந்த தேவனைக் கொண்டிருக்கிறபடியால், அவர் நம்மை வழிநடத்திச் செல்லப் போதுமானவராய் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு உறுதியாய் வாழ முடியும். “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6). தேவன் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் உண்டாக்கி ஆட்சி செய்கிறவராய் இருக்கிறார். அவர் மாறாதவர் ஆகவே நாம் நிர்மூலமாகவில்லை. மெய்யாலுமே அவருடைய கிருபையினால் மாத்திரமே நாம் ஒவ்வொரு நாளும் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிகட்டப்படாமல், அவருடைய கிருபையின் நிமித்தமாக நாம் பாதுகாக்கப்படுகிறோம். ஆகவே இந்த தேவன் நமக்குப் போதுமானவர். நம்முடைய வாழ்க்கையில் அவருடைய மாறாத கிருபை நம்மை வழிநடத்தப் போதுமானதாய் இருக்கிறது.