கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 13                       கிருபை பொருந்திய தேவன்            1 பேதுரு 5:1–11

‘சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சகாலம் பாடனுபவிக்கிற

உங்களை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக’ (1 பேதுரு 5:10)

    இந்த தேவன் சகல கிருபையும் பொருந்தியவர் என்பதை மறவாதே. பாடுகளின் வழியாக கடந்துபோன இந்த மக்களுக்குப் பேதுரு இவ்விதம் எழுதுகிறார். இந்த பாடுகள் எப்போதும் தொடர்ந்து இருப்பதில்ல. இது ஒரு குறுகிய காலம், கடந்து செல்லவேண்டிய வாழ்க்கை. ஆனால் இந்த பாடுகள் உன்னை ஆவிக்குரிய  மேலான நோக்கங்களுக்கு உருவாக்குகின்றன என்று இவ்விதமாக தொடர்ந்து எழுதுகிறார். இதில் நான்கு காரியங்களைச் சொல்லுகிறார். 1. சீர்படுத்துதல் 2. ஸ்திரப்படுத்துதல் 3. பலப்படுத்துதல் 4. நிலைநிறுத்துதல். அன்பானவர்களே! தேவன் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்துமாவிலும் இவ்விதமான கிருபைகளைக் கட்டளையிடுவார்.

    முதலாவது சீர்படுத்துதல், அதாவது ஆங்கிலத்தில் சீர்திருத்துதல் என்று பொருள்படும். தேவன் ஒரு விசுவாசியைத் தொடர்ந்து சீர்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அவனில் தவறான காயியங்களை நீக்கி ஆவிக்குரிய காரியங்களைப் பெருகப்பண்ணுகிறார். நம்முடைய எண்ணங்களில் சிந்தனைகளில், விளங்குதல்களில் தொடர்ந்து தமது ஆவியானவரைக் கொண்டு செயல்படுகிறார். அடுத்ததாக ஸ்திரப்படுத்துதல், அதாவது உறுதிபடுத்துதல். இன்றைக்கு அநேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியற்றவர்களாய்க் காணபடுகிறார்கள். பவுல் கொரிந்து சபையாருக்கு’ முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்’ (1 கொரிந் 1 : 8 ) என்று எழுதுகிறார். அன்பானவர்களே! ஆவிக்குரிய ஸ்திரத்தன்மை உங்களுக்கு தேவை.

     அடுத்தது பெலப்படுத்துதல். ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு’ (பிலி 4: 13) என்று பவுல் சொல்லுகிறார். கடைசியாக நிலைநிறுத்துவார் என்று சொல்லப்படுகிறது. அதாவது வலதுஇடதுபுறம் சாயாமல் தொடர்ந்து இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் நடக்க தேவன் உதவிசெய்வார். தேவன் இவ்விதமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.