கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 9                         உண்மையுள்ள தேவன்                        நெகே 1:1–11

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்பு கூர்ந்து,

உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,

உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற

மகத்துவமும் பயங்கரமுமான தேவனே (நெகேமியா 1 : 5)

    நெகேமியா, பாபிலோன் தேசத்தில் பெர்சிய ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு பானபாத்திரகாரணாயிருந்தான். அந்த சமயத்தில் அவன் எருசலேமில் மீந்திருந்தவர்களின் நிலைமையைக் கேள்விப்பட்டான். சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்த தேசத்திலே மகா தீங்கையும், நிந்தையையும் அனுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க்கிடக்கிறது என்றார்கள் (நெகேமியா 1 : 3). இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் (நெகேமியா) உட்கார்ந்து அழுது, சில நாளாய்த்துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி (நெகே 1:4). ஜெபித்தேன் இங்கு நெகேமியா ஜெபத்தில் தேவனின் உண்மைத்தன்மையை நினைவுகூறுகிறான். ஜெபத்தின் அஸ்திபாரம் தேவனின் உண்மைத்தன்மையைச் சார்ந்திருக்கிறது.

      தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் உண்மை உள்ளவராயிருக்கிறார். அவர் ஒருக்காலும் மாறாதவர். நெகேமியா நம்பிக்கையற்ற நிலையில் கடந்துபோன யூத மக்களுக்காக தேவனை நோக்கி ஜெபிக்கிறார். நீயும் நெகேமியாவைப் போல அவருடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தைச் சொல்லி ஜெபித்து வா. அவ்விதமான ஜெபம் தேவனை ஆழமாய் பற்றிக்கொள்ளும் ஜெபமாயிருக்கிறது. யூத மக்களுக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை, உடன்படிக்கையை நினைவுப்படுத்தி நெகேமியா ஜெபித்தான்.

     நீயும் ஜெபிக்கும்பொழுது தேவனின் உண்மைத்தன்மையை நினைவுக்கூர்ந்து ஜெபிப்பாயானால் உன் ஜெபம் உறுதியுள்ளதாக இருக்கும். அவ்விதமான ஜெபங்களுக்குத் தேவன் நிச்சயமாய் பதிலளிப்பார் என்பதில் சந்தேகம் கொள்ளாதே. அவர் கிருபையைக் காக்கிற தேவனயிருக்கிறபடியால், அவருடைய கிருபையை நினைவுக்கூர்ந்து தேவனிடத்தில் வா. தேவன் மகத்துவமான காரியங்களை உனக்குச் செய்வதைக் காண்பாய். கர்த்தரை நீ மகிமைப்படுத்துவாய்.