கிருபை சத்திய தினதியானம்

மார்ச் 2                  இரக்கமுள்ள கர்த்தர்                எரேமியா 31:1-30

“அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்”(31:20).

      அநேக சமயங்களில் நாம் கர்த்தருடைய மன உருக்கத்தை நினைப்பதில்லை. கர்த்தர் மெய்யாலுமே அதிக மன உருக்கமுள்ளவர். நம் வாழ்க்கையில் நம்முடைய பாவங்களைக் குறித்து உணர்ந்து, அவர் இடத்தில் கிட்டிச் சேரும்பொழுது, அவர் மன உருக்கத்தோடு நம்மை நோக்கிப்பார்த்து நம்முடைய பாவங்களை மன்னித்து அவர் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுகிறார். ஆகவேதான் ஏசாயா தீர்க்கத்தரிசி இவ்விதமாக சொல்லுகிறார், “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:7).

        நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களை உணர்ந்து கர்த்தர் பக்கமாக திரும்புவோம். அவர் நம்மை மன்னித்து நன்மைகளால் திருப்தி செய்யக்கூடியவராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, உலகம் கொடுக்காத சமாதானத்தைக் கொடுக்கிறவராக இருக்கிறார். “அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்”( ஏசாயா 57:17) என்று தேவன் சொல்லுகிறார். நம்முடைய துக்கங்களில் இருந்து அவர் ஆறுதல் அளிக்கிறவாக இருக்கிறார். “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று”(ஓசியா 14:4). தேவன் நம்முடைய சீர்க்கேட்டை, அதாவது தேவனுக்கும் நமக்கு இடையில் உள்ள பாவத்தை நீக்குவேன் என்று சொல்லுகிறார்.

        அன்பானவர்களே! நம் வாழ்க்கையில் தேவன் பக்கமாக திரும்பவதை விட வேறொரு மகிமையான காரியமில்லை. நம்முடைய நெருக்கங்களின் வேளையில், இக்கட்டுகளின் சூழ்நிலையில் கர்த்தரை நாம் நோக்கிப்பார்ப்போம். அப்பொழுது அவர் நம்மேல் இரங்கி, நம் சீர்கேட்டையும், பாவத்தின் அகோரத்தையும் நம்மிலிருந்து நீக்கிப்போடுவார். ஆகவேதான் மீகா தீர்க்கத்ததரிசியின் மூலமாக இவ்விதமாக சொல்லுகிறார், “அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:19) என்று. உன் பாவத்தில் இருந்து விடுப்படும்படியாக கர்த்தரிடத்தில் திரும்பு, அவன் தன் குமாரன் இயேசுவின் மூலமாக உன்னை மீட்டுக்கொள்ளுவார். அப்பொழுது நித்திய ஜீவன் உனக்கு உண்டாகும்.