“பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்” (சங்கீதம் 50:2).

இந்த உலகத்தில் எல்லாக் காரியங்களும் குறைவுள்ளவைகள். ஆனால் சீயோன் ஒன்றே பரிபூரணமானது, நிறைவுள்ளது. இந்த இடத்தில் தேவன் பூரணமான சீயோனிலிருந்து என்று சொல்லப்படுகிறது. பரலோகம் என்பது நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றிக்கும் முழுமையானதாகவும், நாம் முழு திருப்தியையும், சமாதனத்தையும் சந்தோஷத்தையும் பெற்று வாழக்கூடிய ஒரு ஸ்தலமாகக் காணப்படுகிறது. இந்தப் பூரண வடிவுள்ள சீயோன் என்பது நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கி ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிற காரியமாக இருக்கிறது. இந்த இடத்திலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். பரலோகத்தை நம்முடைய கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், தேவன் தம்முடைய வெளிச்சத்தை சீயோனிலிருந்து நம்மேல் பிரகாசிப்பிக்கிறவராய் இருக்கிறார். காற்றை நாம் பார்ப்பதில்லை, ஆனால் உணருகிறோம். தேவனும் கூட இந்த மகிமையுள்ள ஸ்தலத்திலிருந்து நம்முடைய வாழ்க்கையைப் பிரகாசிப்பிக்கிறார். நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார். நம்மை நோக்கிப் பார்க்கிறார். சகலத்தையும் ஆளுகைச் செய்கிறார். “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே” என்று நாம் சொல்லும்போது இந்தப் பரிபூரண வடிவுள்ள சீயோனில் இருக்கிற தேவனை நாம் நோக்கிப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் அவருடைய பிரகாசம் தேவை. இந்த உலகத்தின் காரியங்களினால் கறைபட்டவர்களாய் வாழுகிற நாம், அவருடைய பிரகாசம் நம்மேல் படுமானால், நாம் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனுடைய நீதியைத் தரித்தவர்களாக, அவருக்கு உகந்தவர்களாக அவருடைய பிரகாசத்தினால் பிரகாசிக்கப்பட்டவர்களாய் வாழுகிற அருமையான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். பவுலும் கூட, காண்கிறவைகளை அல்ல, காணதவைகள் மேல் நோக்கமாயிருக்கிற நமக்கு என்று சொல்லுகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இந்தப் பூரண வடிவுள்ள சீயோனை நோக்கிப் பார்ப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக அதில் வாசம்பண்ணுகிற தேவனுடைய பிரகாசமானது நம்மை ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் பிரகாசிப்பிக்க வேண்டும் என்று வாஞ்சிப்போம். இந்த உலகத்திலுள்ள எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாய் இருக்கிற தேவன் நம்முடைய வாழ்க்கையையும் பிரகாசிப்பிப்பார்.