மார்ச் 4     

“தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை” (ரோமர் 11:2).

தேவனின் நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல் என்பது கிருபையின் சத்தியத்தின் மிக அடிப்படையானவைகளில் முக்கியமான ஒன்று. தகுதியில்லாத என்னை தேவன் தெரிந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வோடு வாழுகிற வாழ்க்கையே கிருபையின் சத்தியத்தின் ஆழமான காரியமாய் இருக்கிறது. தேவனுடைய அன்பை ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் உண்மையாக அறிந்து உணர்ந்து வாழுவதற்கு தகுதியில்லாத என்னை தேவன் தெரிந்துகொண்டிருக்கிறார் என்ற அந்த உண்மையான சத்தியத்தின்  அறிந்துகொள்ளுதலும் விளங்குதலும் இல்லாமல் ஆண்டவருடைய அன்பை ஒரு மனிதன் அனுபவிக்க முடியாது. அநேகருடைய வாழ்க்கையில் கிருபையின் சத்தியத்தை அறிந்திருந்தாலும், ஆண்டவருடைய அன்பை உணர்ந்து வாழுகிற வாழ்க்கையும் இருப்பதில்லை. ஏன்? இந்த அடிப்படையான சத்தியத்தில் அவர்கள் உள்ளான இருதயத்தின் உணர்வு இல்லாமல் இருக்கும்பொழுது தேவனுடைய அன்பை அனுபவித்து ருசித்து வாழ முடியாது. கிருபையின் சத்தியத்தை அறிந்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக காணப்படுகிற மற்றொரு காரியம் தாழ்மை. தகுதியில்லாத என்னைத் தேவன் தெரிந்துகொண்டு இரட்சித்திருக்கிறார், தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்ற அந்த உள்ளான உணர்வு அவனுடைய வாழ்க்கையில் காணப்படும். ஆண்டவருடைய அன்பை ருசித்து வாழ்வது மற்றும் தாழ்மை ஆகிய இரண்டும் கிருபையின் சத்தியத்தை அறிந்தவர்களின் வாழ்க்கையில் காணப்படும். இயேசு கிறிஸ்து பத்து குஷ்டரோகிகளை சொஸ்தப்படுத்தினார். ஆனால் அதில் ஒரு குஷ்டரோகி மாத்திரமே திரும்பி வந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினதைப் பார்க்கிறோம். ஆகவே ஆண்டவருடைய அன்பை ருசித்து வாழ்கின்ற வாழ்க்கையும், தாழ்மையும் இல்லாதபொழுது, கிருபையின் சத்தியத்தை அறிந்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவரை அனுபவித்து, அவரை மகிமைப்படுத்தக்கூடிய ஒரு வாழ்க்கை அவர்களில் காணப்படாது. பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் கிரியைச் செய்யும்பொழுது மாத்திரமே, தகுதியற்ற என்னை ஆண்டவர் இரட்சித்திருக்கிறார் என்ற உண்மையான உணர்வோடு தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களாகக் காணப்படுவார்கள்.