“தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்” (சங்கீதம் 71:11-12).
சங்கீதக்காரன் தேவன் தன்னைக் கைவிட்டதாகவும் அவர் தனக்கு தூரமாய் இருப்பதாக இவ்விதம் தேவனை நோக்கி ஜெபிக்கிறான். மனிதர்கள் ஒருவேளை நம்மைக் குறித்து எதிர்மறையான எண்ணங்களை கொண்டு செயல்படலாம். நம்மைத் தேவன் கைவிட்டுவிட்டார் என்றும் சொல்லலாம். ஆனால் தேவன் நம்மை அவ்விதம் கைவிடுவாரா? இல்லை. இங்கு சங்கீதக்காரன் பயந்து அவர்களுடைய பேச்சின்நிமித்தமாக, தேவனே எனக்குத் தூரமாயிராதேயும் என்று கதறுகிறார். அருமையானவர்களே! தேவன் நம்மோடு எப்போதும் இருப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். மனிதர்களுடைய வார்த்தைகளைக் கண்டு நீங்கள் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அவ்விதமான எண்ணம் நமக்கு வரும்பொழுது சங்கீதக்காரனைப் போல அவ்வாறு ஜெபிக்கலாம். அவர் ஏற்றவேளையில் தம்முடைய அநுக்கிரகத்தைத் தந்து நம்மை மற்றவர்களுக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போக விடமாட்டார் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தையை நம்பி அதைச் சார்ந்து வாழுகிறோம். தேவனே நம் பாதுகாப்பாய் நம்மை வழிநடத்தக்கூடியவராய் இருக்கிறார். ஆகவேதான் சங்கீதக்காரன் 14 -ஆம் வசனத்தில் “நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்” என்று சொல்லுகிறார்.