“தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்”(சங்கீதம் 68:6).

நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் தனிமையானவர்களாய் வாழலாம். தனிமை உணர்வோடு நம்முடைய வாழ்க்கைக் காணப்படலாம். இது இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கும் பொருந்தும். இதை தேவன் அழகாகத் தம்முடைய ஞானத்தைக் கொண்டுச் சரியாக்குகிறேன் என்று சொல்லுகிறார். தனிமையானவர்களுக்குத் தேவை என்ன என்பதை அறிந்தவராக, வீடு வாசலை நான் ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்றும் சொல்லுகிறார். தனிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தேவன் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது அது மிகுந்த ஆச்சரியமாயிருக்கின்றது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன். அவர்களுடைய தேவை இன்னது என்பதை அறிந்து அந்த தேவையைச் சந்திக்கக்கூடிய அருமையான தேவன் இவர். நம்முடைய வாழ்க்கையின் தேவைகளை அறிந்திருக்கிறார். அநேக வேளைகளில் நாம் நம்முடைய தேவைகளைக் குறித்து மனம்கலங்குகிறோம், சோர்ந்துபோகிறோம். ஆவிக்குரிய தேவைகளிலும் தேவன் நமக்கு தேவையானவைகளைக் கொடுக்கிறார். கட்டுண்டவர்களை அவர் விடுதலையாக்குகிறார். நம்முடைய வாழ்க்கையில் பாவம் நம்மை கட்டிவைத்திருக்கிறதா? ஆனால் தேவன் அதிலிருந்து விடுதலையாக்குகிறார். “குமாரன் விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்று வேதம் சொல்லுகிறது. இந்த தேவனோடு உங்களுடைய உறவு எவ்விதமாக இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அவரோடு ஒப்புரவாகி உங்களுடைய வாழ்க்கையை அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையின் எல்லாக் காரியங்களையும் செவ்வைப்படுத்துவார். நம்முடைய வாழ்க்கையில் நம் சுய ஞானத்தைக் கொண்டு செயல்படுவதின் நிமித்தமாக பல தோல்விகளைச் சந்திக்கிறோம். ஆனால் இப்பொழுது ஆண்டவருடைய கரத்தில் உங்களை ஒப்புக்கொடுங்கள் தனிமையாய் இருக்கிற உங்களுக்கு வீடு வாசலை ஏற்படுத்தி, கட்டுண்ட உங்களை விடுதலையாக்குவார்.