நவம்பர் 24 

      “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22).

      இந்த உலகத்தில் எந்த நாட்டில், எந்த பகுதியில், எந்த இடத்தில் இருந்தாலும் தேவன் அவரை நோக்கிப் பார்க்கும்படியாக அழைக்கிறார். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்று தேவன் சொல்லுகிறார். இங்கிலாந்தில் ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதன் வாலிபனாக இருந்த பொழுது இந்த வசனத்தைக் கேட்டபொழுது, ஆவியானவரால் குத்தப்பட்டு இரட்சிக்கப்பட்டார். நாமும் கூட இரட்சிக்கப்பட கர்த்தரை நோக்கிப் பார்ப்பது மிக அவசியம். ஆகவேதான் மீகா தீர்க்கத்தரிசி: “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (மீகா 7:7) என்று சொல்லுகிறார். இந்த பிரபஞ்சத்தில் இரட்சிக்கும் ஒரே தேவன் இயேசுகிறிஸ்து மாத்திரமே.

      ஆகவேதான் வேதம், இரட்சிக்கப்படும் படியாக இயேசுவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை என்று தெளிவாக போதிக்கிறது. ஆகவே நாம் இரட்சிக்கப்படும் படியாக கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். “பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே” (சங்கீதம் 65:3) என்று சங்கீதக்காரன் பாடுகிறான். ஆம்! அவரே நம்மை இரட்சிக்கிற தேவன். அவரே நம்மை மீட்டுக்கொள்ளுகிற தேவன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. “நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22) என்று தேவன் சொல்லுகிறார். ஆம்! இந்த உலகத்தில் கர்த்தரைத் தவிர வேறொரு தேவன் இல்லை. “நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:21) என்று வேதம் சொல்லுகிறது. வானத்தையும் பூமியையும் படைத்து சகலத்தையும் ஆளுகிற அவரே நம்மை இரட்சிக்கிற தேவன் என்பதை நம் இருதயத்தில் அறிந்து விசுவாசிப்போமாக. அவர் நம்மை எந்தவொரு சூழ்நிலையிலும் கைவிடாமல் இரட்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.