கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 16                       இலக்கை நோக்கித் தொடருதல்                    பிலி 3:1-21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின்

பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி 3:14).

      பவுல் இங்கு தன்னுடைய வாழ்க்கையின் ஓட்டத்தை எவ்விதமாக ஓடினார் என்பதை விளக்குகிறார். உன்னுடைய வாழ்க்கையில் இவ்விதமாக தேவன் அழைத்திருக்கிற பரம அழைப்பைக் குறித்த சிந்தனை உன்னிடத்தில் உண்டா? இது மிக அவசியமானது. உன்னுடைய வாழ்க்கையில் எதை இலக்காக கொண்டுள்ளாய் என்பது மிக அவசியம். இன்றைக்கு அநேகரின் இலக்கு என்பது பணம், சொத்து, மற்றும் இந்த உலகத்திற்குரிய பல காரியங்கள். ஆனால் ஒரு மெய் கிறிஸ்தவனின் இலக்கு என்பது தேவன், தேவன் மாத்திரமே. அதாவது நித்தியத்திற்கான இலக்கு. அது பரலோக இராஜ்யத்திற்கான இலக்கு.

     இதை நாம் இலக்காக கொண்டிருக்கவில்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நாம் வழித்தப்பி செல்லுகிறவர்களாகவே காணப்படுவோம். எபிரெயர் 3:31 –லும் கூட “இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே” என்று சொல்லப்படுகிறது. இது பரம அழைப்பு. உன்னுடைய வாழ்க்கையில் பரம அழைப்பிற்கு பங்குள்ளவனாக நீ எண்ணுகிறாயா? ஆகவே தான், 1 பேதுரு 1:13 –ல் “ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்” என்று பேதுரு சொல்லுகிறார்.

      தேவன் உன்னுடைய வாழ்க்கையில், நீ இலக்கை நோக்கி தொடரும்படியான ஓட்டத்தில் உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கையோடே ஓடு. 1 பேதுரு 5:10 –ல் “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;” என்று சொல்லுகிறார்.  நித்திய மகிமைக்கு அழைக்கப்பட்டிருகிற உன்னுடைய அதுவாகவே  இருக்கட்டும். அதற்குக் குறைவான வேறந்த இலக்கையும் வைத்து நீ ஓடக் கூடாது.