“அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்” (லூக்கா 8:48).

வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன ஒரு ஸ்திரியைப் பார்த்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விதம் சொல்லுகிறார். அவள் பன்னிரண்டு வருடங்களாக பெரும்பாடுள்ளவளாக இருந்தாள். அவள் தன் வாழ்க்கையில் வைத்திருந்த எல்லாப் பணத்தையுமே வைத்தியத்தில் செலவு செய்துவிட்டாள். ஒரு நம்பிக்கையற்றவளாகத் தன் பிரச்சனையிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலை இல்லாதவளாய், மனசஞ்சலத்தோடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாள். இயேசு கிறிஸ்து அவளை அற்பமாக எண்ணவில்லை. அவளைப் பார்த்து ‘மகளே’ என்று அழைக்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் இவ்விதமான சோர்வுக்குள்ளான காரியங்கள் காணப்படுகிறதா? அப்படியென்றால் திடன்கொள்ளுங்கள். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. உன் வாழ்க்கையில் நீ கொண்டிருந்த நம்பிக்கை வீணாய்ப் போகவில்லை. நம் வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்கள் நெருக்கங்களினால் நம்முடைய விசுவாச நிலையில் நாம் தடுமாறுகிறவர்களாகக் காணப்பட்டாலும், ஆண்டவர் அதையும் கனப்படுத்துகிறார். மேலும் அந்த ஸ்திரியைப் பார்த்து, சமாதானத்தோடே போ என்றும் சொல்லுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் வரும்பொழுது மாத்திரமே நமக்கு சமாதானம். இந்தப் பொல்லாத உலகத்தில் சமாதானத்தை நாம் வேறெங்கும் பார்க்க முடியுமா? இல்லை. சமாதான காரணராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நோக்கிப் பார்க்கும்பொழுது நிச்சயமாக சமாதானத்தின் நிறைவை நமக்குக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் காரியம் எல்லாவற்றையும் அவருடைய கரத்தில் ஒப்புவிக்க நாம் கற்றுக்கொள்வோம். அநேக வேளைகளில் நாம் நம்முடைய சொந்த ஞானத்தினால் செய்யப் பிரயாசப்படும்பொழுது அது நமக்குச் சமாதானமாக இருப்பதில்லை. அவரிடத்தில் நம்முடைய காரியங்களை ஒப்புவிப்பதே சிறந்தது.