அக்டோபர் 27          

தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற  மகிமையை அதிகமாகய் விரும்பினார்கள்(யோவான் 12:43)

     தேவனால் வரும் மகிமை எவ்வளவு மேன்மையானது! தேவாதி தேவன் நம்மை அங்கிகரிப்பது, நல்லது. உன்மையும் உத்தமுமானவனே என்று தேவன் சொல்லுவதைக் காட்டிலும் வேறு மகிமை உண்டோ?  ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனிடத்திலிருந்து வரும்படியான இவ்விதமான மகிமையை வாஞ்சிக்க வேண்டும். அதற்காக தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியமும் காணப்பட வேண்டும் என்று கர்த்தருக்குள் பிரயாசப்பட வேண்டும். அதுவே ஒரு மெய் கிறிஸ்தவனின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

     ஆண்டவராகிய இயேசு ஒரு சிலரைக்குறித்து ‘மனுஷரால் வரும் மகிமையை விரும்புகிறார்கள்’ என்று இங்கு சொல்லியிருக்கிறார்? யாரைப்பற்றி இவ்விதம் சொல்லுகிறார்? அதற்கு முந்திய வசனத்தைப் பாருங்கள். ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்திற்கு புறம்பாக்கப்படாதபடி பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கை பண்ணாதிருந்தார்கள்(யோவான் 12:42) இந்த மக்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். ஆனால் மற்றவர்கள் முன்பாக அதை அறிக்கைபண்ணவில்லை. அருமையான சகோதரனே! சகோதரியே! நீ ஒருவேளை அவ்விதம் இருக்கலாம். உன் விசுவாசத்தை மற்றவர்களுக்கு அறிக்கையிட்டால் அவர்கள் உன்னை தாழ்வாக எண்ணுவார்களோ என்ற அச்சம். மற்றும் நீ மற்றவர்கள் முன்பாக அற்பமாக எண்ணப்படுவாயோ என்ற பயம் உன்னிடத்தில் இருக்கலாம்.

     அன்பானவரே! மனுஷரின் மதிப்பையும் மேன்மையையும் தேடாதே. அது ஒருபோதும் ஆவிக்குரிய நன்மையாய் இருக்காது. ஆண்டவராகிய இயேசு சொல்லுகிறார், நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.’ (யோவான் 5:41) நம்முடைய இரட்சகரைக்குறித்து என்ன சொல்லப்படுகிறது அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப் பட்டவருமாயிருக்கிறார்(ஏசாயா 53:3). நீ மெய் சீஷனாய் இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க விரும்புகிறாயா? உலகத்தின் மேன்மையை விரும்பாதே. உனக்காக பாடுபட்ட இயேசுவை நினை கர்த்தர் உன்னை மேன்மைப் படுத்துவார்.