கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 11                         யாக்கோபின் மகிமை                         நாகூம் 2:1–13

“வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி,

அவர்களுடைய திராட்சக் கொடிகளைக் கெடுத்துப் போட்டாலும்,

கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பி வரப்பண்ணுவதுபோல்,

இஸ்ரவேலின் மகிமையையும் திரும்ப வரப்பண்ணுவார்(நாகூம் 2:2)

            இந்த உலகத்தில் மெய்கிறிஸ்தவனுக்கு அநேக போராட்டங்கள் உண்டு! அவனை கீழே தள்ள எத்தனையோ காரியங்கள் மனிதர்கள் மூலமாக சாத்தான் செயல்படுவதுண்டு. உங்களை வெறுமையாக்கிப்போடுவதையே குறிக்கோளாகக் கொண்டு, ஒருவேளை அநேகர் செயல்படலாம். அல்லது நீங்கள் வெறுமையாய் போவதை அநேகர் விரும்பி எதிர்ப்பார்க்கலாம். ஆனால் உன்னுடைய பிரச்சனை என்னவென்றால் நீ எப்போதும் இவர்களைப் பார்த்து சோர்ந்து போகிறாய். அவர்களைக் குற்றஞ்சாட்டுகிறாய், கோபப்படுகிறாய், பதஷ்டப்படுகிறாய், எரிச்சலடைகிறாய். இப்படியாக எல்லாவிதத்திலும் உன் சமாதானத்தை முற்றிலும் இழந்துவிடுகிறாய். ஏன்? தொடர்ந்து வாசித்துப்பார்.

            அவர்கள் வெறுமையாக்கிப் போட்டாலும் திராட்சை செடிகளை கெடுத்துப்போட்டாலும் கர்த்தர் மகிமையை திரும்பி வரபண்ணுவார் என்று சொல்லப்படுகிறது. நீ உன் முகத்தை, பார்வையை, மனிதனிலிருந்து, அவர்கள் ஏற்படுத்திய அழிவிலிருந்து, கர்த்தரின் பக்கம் திரும்பவேண்டும். ஆனால் நீ தேவனை அறியாதிருந்தால் எப்படி கர்த்தரின் பக்கம் திரும்புவாய்? உன் பாவங்களை மன்னித்து அவர் தம்முடைய பிள்ளையாக உன்னை மாற்றாதிருந்தால் எப்படி நீ அவர் பக்கம் திரும்புவாய்? அப்படி இதுவரை தேவனிடத்தில் மனந்திரும்பாதிருப்பாயானால் இவ்விதமான சூழ்நிலைகளில் நீ மனந்திரும்பு  அப்பொழுது நீ இரட்டிப்பான நன்மையைப் பெற்றுக்கொள்ள வழிநடத்தும். ஒன்று மனந்திரும்புதல், இரண்டு, மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவு நீக்கப்பட்டு தேவனால் கொடுக்கும்படியான மகிமையோடு கூடிய செழிப்பு. ஆகவே இரட்டிப்பான நன்மைகளின் சொந்தக்காரராக நீங்கள் ஆக்கப்படுவது எவ்வளவு மகிமையானது பாருங்கள்! தேவன்தாமே உங்களைஅவ்விதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.