கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 10                           தேவ மகிமை                     ரோமர் 8:11 -19

“இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை” (ரோமர் 8:18)

    ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் தேவனுடைய மகிமை வெளிப்படும் வேளையை தேவன் வைத்திருக்கிறார். ஆனால் இந்த மகிமை எதற்கு ஈடாக கொடுக்கப்படுகிறது. பாவத்தின் சம்பளம் ஆத்தும மரணம். ஆனால் பாடுகளின் சம்பளம் மகிமை. அவைகள் பலமடங்காக பெருக்கிக் கொடுக்கப்படுகிறது. ஆகவே அருமையான சகோதரனே! சகோதரியே! உன்னுடைய பாடுகளைக் குறித்து முற்றிலும் நம்பிக்கையற்று சோர்ந்துபோகாதே. தேவன் அவைகளை மகிமையாக உனக்குத் தருவார் என்ற நம்பிக்கையினால் உன்னை தேற்றிக்கொள். ஆம்! அது தேவனுடைய வார்த்தை.

    தேவனுடைய மக்கள் பாடுகளினூடே கடந்து போகும்போது தேவன் அவர்களை கைவிடுவதில்லை. அந்த வேளைகளில், ஆறுதலினால் அவர்களை ஆற்றுகிறார்,தேற்றுகிறார். ஆறுதலின் தேவனான அவர், தம்முடைய ஆறுதலைக் கொடுத்து அவைகளின் வழியாக நடத்திச்செல்லுகிறார். பவுல் நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைவீர்கள் (2கொரி 1:7). என்கிறார். நீ பாடுகளின் வேளையில் என்ன செய்யவேண்டும்? ஆறுதல் கொடுக்கும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் தேவக்குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்படிதலைக் கற்றுக்கொண்டு (எபி 5:8) என்று சொல்லப்படுகிறது. சிலுவையைச் சுமந்து செல்லுகிற நீ உன் வாழ்வின் முடிவில் சிலுவைக்குப் பதிலாக கிரீடத்தைப் பெறும் நாள் உண்டு என்பது  உன்னைப் பாடுகளின் மத்தியில் உற்சாகப்படுத்தட்டும்.

   மேலும் பாடுபடுகிற உனக்கு தேவன் உதவியை வாக்குப்பண்ணியிருக்கிறார். நீ உதவியற்று நிர்பாக்கியனாய்க் கைவிடப்படமாட்டாய். ஆதலால் அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். (எபி 2:18). அன்பானவர்களே! எவ்வளவாய் பாடுகள் படுகிறீர்களோ அவ்வளவாய் மகிமை பலமடங்குகளில் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதை மறவாதீர்கள்.