“உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசாயா 33:17).
சர்வத்திலும் மகிமை பொருந்தினவர் ஒருவரே, அவர் இயேசு கிறிஸ்து. அநேகர் இயேசு கிறிஸ்துவை மேலோட்டமாக பார்க்கிறார்கள். அதாவது அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு இயேசு கஷ்டங்களை போக்கவும், தேவைகளைச் சந்திக்கவும் அவர் வேண்டும். ஆனால் இந்த இடத்தில் மகிமை பொருந்தினவராகக் காணுவதைக் குறித்துப் பேசுகிறது. அப்படியானால் இந்த உலகம் ஒருநாள் அழிந்துபோம். இந்த உலகத்தின் காரியங்கள் அனைத்தும் அழிந்து போகும். இந்த உலகத்தில் எதுவுமே மகிமை பொருந்தினது அல்ல. நாம் இந்த உலகத்தில் நித்திய நித்தியமாய் வாழப் போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தில் நம் சந்தோஷத்தை தேடுவதும், அதைக் குறித்த சிந்தையும் எண்ணமும் நாம் கொண்டிருப்போமானால், நம்முடைய ஆத்துமாவின் நித்தியத்தைக் குறித்து நாம் தேடாதவர்களாய் காணப்படுவோம்.
கிறிஸ்துவானவர் இந்த உலகத்தில் ஒரு பாவியை நீதிமானாக்குகிறார். அவர்கள் அவருடைய மகிமையில் நித்திய நித்தியமாக என்றென்றும் வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பாவியாகவே பிறக்கிறான். ஆனால் அவனை கிறிஸ்துவானவர் தம்முடைய விலையேறப்பெற்ற பலியின் மூலமாக, அவனுடைய இருதயத்தை மாற்றி, பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலை கொடுத்து, இந்த உலகத்தில் அவன் வாழ்ந்தாலும், இயேசுவை மகிமையாய் பார்க்கும்படியாக செய்கிறார். நீங்கள் பரலோகத்திற்கு போகும் நம்பிக்கை கொண்ட ஒரு நபராக வாழுகிறீர்களா? அல்லது இந்த உலகப்பிரகாரமான சில நன்மைகளுக்காக மாத்திரமே இயேசு கிறிஸ்துவைத் தேடுகிறீர்களா? சிந்தித்துப் பார்ங்கள். உங்களுடைய வாழ்க்கையில் மகிமையான காரியங்களைத் தேடுங்கள். இந்த உலகம் ஒருநாள் அழிந்து போகும். உலகத்தின் காரியங்களைத் தேடி, நித்திய வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்.ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்(2 கொரி 4:18).