“மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார்” (ஏசாயா 33:21).

இந்த தேவன் மகிமையுள்ள கர்த்தர். அழிந்துகொண்டிருக்கிறவர்களின் வாழ்க்கையில் தங்கள் எல்லா நம்பிக்கையும் இழந்துபோனவர்கள், ஆண்டவரால் கண்டு கொள்ளப்பட்டபொழுது, அவர்களுடைய வாழ்க்கை மகிமையாய் மாறுகிறது. அவர் நம்முடைய வாழ்க்கையில் மகா விசாலமான நதிகள் போலவும் ஆறுகளைப் போலவும் இருப்பார். அப்படியென்றால் என்ன? நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்கள் நம்மை கட்டுப்படுத்துகிறது. அது நம்முடைய சுயம் என்கிற பாவமே. ஆனால் ஆண்டவர் பரலோகத்தில் மகிமையாய் வீற்றிருக்கிறவர் மாத்திரமல்ல, அங்கு நம்மை கட்டுப்படுத்தக்கூடிய காரியங்கள் எதுவுமேயில்லை. ஏனென்றால் பரலோகத்தில் பாவம் என்பதில்லை. அந்த இடத்தில் முழு சுயாதீனத்தோடு கூடக் கர்த்தருடைய கிருபையை அனுபவிப்போம். இந்த உலகத்தில் பாவத்தின் விளைவுகளும் பாவத்தின் தாக்கமும் உண்டு. ஆனால் பரலோகத்தில் இவைகள் எல்லாம் எடுக்கப்பட்டுப் போவதினால், அங்கு தேவனை மகிமையுள்ளவராகக் காண்பது மாத்திரமல்ல அந்த மகிமையை அனுபவிப்போம். அதின் விளைவாய் விடுதலையும், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பரிபூரணமாக அனுபவிப்போம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் இவ்வாறு செய்ய முடியும் என்ற நம்பிக்கை நம்மைப் பெலப்படுத்தட்டும்.