ஜனவரி 6                  மகிமையான சுவிசேஷம்                1 தீமோ 1:1-11

“நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி

எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு

எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும்

விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது” (1 தீமோ 1:11).

      தேவனுடைய சுவிசேஷம் நித்திய ஆனந்தம் தருவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் எந்த ஒரு காரியமும் நித்திய ஆனந்தத்தை தராது. இந்த உலகத்தில் நித்திய ஆனந்தத்தை தேவனுடைய சுவிசேஷம் மாத்திரமே கொடுக்க வல்லதாக இருக்கிறது. பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார் என்கிற சுவிசேஷம் மனிதனுக்கு நித்திய ஆனந்தத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த சுவிசேஷம் என்பது அற்பமானதல்ல. அது மகிமையானது என்று வேதம் சொல்லுகிறது. ‘மகிமையானது’ என்கிற வார்த்தையை நாம் எண்ணிப்பார்க்கும் பொழுது அது மேன்மைக்குரியதாக இருக்கிறது. இந்த மகிமையான சுவிசேஷத்தை மனிதன் அறியாதபடிக்கு பரிதாபமான நிலையில் வாழ்ந்து வருகிறான். “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரி 4:4).

      தேவனுடைய சுவிசேஷம் என்பது மகிமையான சுவிசேஷத்தின் ஒளியாக காணப்படுகிறது. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி 4:6). ஒரு பாவி இருளான இருதயத்தைக் கொண்டவனாகக் காணப்படுகிறான். அவனில் இந்த மகிமையான ஒளி பிரகாசிக்கும் பொழுது, அவன் மகிமையான ஆத்துமாவாக மாற்றப்படுகிறான். உன்னத தேவ கிருபை அவனை பாவ வழியிலிருந்து மீட்டு தேவனுக்கென்று மகிமையான சாட்சியாக நிலைநிறுத்துகிறது.