“அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்”. 1 பேதுரு 5:4

      ஆண்டவர் இந்த மகிமையுள்ள வாடாத கிரீடத்தைக் குறித்து வேதத்தில் மற்ற பகுதிகளிலும் எடுத்துப் பேசுவதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த கிரீடத்தை பவுல் பெறும்படியாக தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருந்த ஒரு குறிக்கோள் என்பதை நாம் பார்க்கிறோம். இதனை நீதியின் கிரீடம் என்று சொல்லுகிறார். “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2 தீமோ 4:8). மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஜீவ கிரீடம் என்று சொல்லப்படுகிறது. “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி 2:10). இது தேவனோடு நாம் ராஜாக்களாக ஆளுகை செய்வோம் என்பதைக் குறிக்கிறது. எஜமானின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிக்கும் படியாக, அவரோடு கூட நாம் மகிமையுள்ளவர்களாக இந்த ஜீவ கிரீடத்தை தரித்தவர்களாகக்  காணப்படுவோம். இதுவே கிறிஸ்தவ வாழ்கையின் மகிமையான வேளையாக இருக்கும். இது உலகத்தின் கிரீடத்தைப் போலல்ல. உலகத்தினுடைய கிரீடம் வாடிவிடும், மறைந்துவிடும், முடிந்துவிடும். ஆனால் இது நித்தியமான கிரீடமாகும். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரி 9:25). மகிமையான காரியத்தை தேவன் தம்முடைய மக்களுக்கு வைத்திருக்கிறார். அதற்காக நாம் இந்த உலகத்தில் தாங்கிக்கொள்ள முடியாத போராட்டங்கள் இருந்தாலும், ஒருநாள் நிச்சயமாக மகிமையுள்ள இடத்தைச் சென்றடைவோம். அவரோடு கூட மகிமையில் ஐக்கியம் கொண்டவர்களாக, அவரைப்போல ஆளுகிறவர்களாக நித்திய வாழ்க்கை வாழுவோம்.