ஜனவரி 26                            மகிழ்ச்சி             நெகேமியா 8:1-12

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகேமியா 8:10).

      எஸ்றா தேவனுடைய வார்த்தையை வாசித்து விளக்கப்படுத்தினபோது அதைக்கேட்ட இஸ்ரவேல் ஜனங்களின் இருதயங்கள் குத்தப்பட்டு அழுதார்கள். அப்பொழுது தான் இந்த வசனம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்”. கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி எப்பொழுது நமக்கு வரும்? உலகப்பிரகாரமான மகிழ்ச்சி என்பது நாம் பெற்றிருக்கும் பொருள்களின் மூலமாகவும், சுய விருப்பம்  நிறைவேறும்பொழுதும் வரும். அது சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும்.

      ஆனால் கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி என்பது என்ன? கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி என்பது ஒரு உன்னதமான காரியமாகும். அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். தேவனுடைய ஜனங்களுக்கு அது மிகுந்த பலனைக் கொடுக்கிறதாக இருக்கிறது. கர்த்தருக்குள் சந்தோஷமாக வாழும் படியான வாழ்க்கையைத் தவிர இந்த உலகத்தில் மகிழ்ச்சியான காரியம் என்பது வேறெதுவும் கிடையாது. “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்” (நீதி 17:22). இன்றைக்கு அநேக மக்கள் மெய்யான சந்தோஷத்தைக் கர்த்தருக்குள் தேடாமல், கர்த்தரை விட்டு வெளியே தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் ஆவிக்குரிய பெலனை இழந்தவர்களாக சோர்வுறுகிறார்கள். அதினால் அவர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். அன்பானவர்களே! நீங்கள் எவ்விதமான மகிழ்ச்சியைத் தேடுகிறீர்கள்? உலகப்பிரகாரமான மகிழ்ச்சியையா? அல்லது கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சியையா? ஆராய்ந்து பாருங்கள்.