செப்டம்பர் 25                    

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்‘ (லூக்கா 6:38)

    இயேசு மாற்றின இருதயம் வித்தியாசமானது. அது மாற்றப்படுவதற்கு முன் இருகலானதாய், சுயமும், சுயநலம் நிரம்பினதாய் இருந்தது. எந்த தீர்மானத்திலும், எந்த காரியத்திலும், அது எனக்கு, நான், என்னுடையது என்றே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. இப்பொழுது அது கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொண்டிருக்கிறது. (பிலிப் 2:4,5) மற்றவர்களைப்பற்றி, மற்றவர்களுடைய தேவையைப் பற்றி, அவர்களுடைய குறைவைப்பற்றி எண்ணுவதோடல்லாமல், நான் அந்த காரியத்தில் எவ்விதம் செயல்படமுடியும் என்று எண்ணுகிறது.

    எப்படி இந்த மாற்றம் உண்டானது? முதலாவது அவனுடைய இருதயம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, பரிசுத்த சிந்தைக்குள்ளாக வழிநடத்தப்படுகிறது. அவனை முழுக்கமுழுக்க ஆளுகை செய்துகொண்டு வந்த சுயம் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. இனி நான் அல்ல, கிறிஸ்துவே (கலா 2:20) என்று அறிக்கையிடுகிறது. கிறிஸ்துவுக்கு பிரியமானதே அவனுக்குப் பிரியமானது. கிறிஸ்துவின் மகிமையே அவனது மேன்மை.

    மேலும் இதற்கு முன்பாக அவன் முற்றிலும் உலகத்துகுரியவனாய் வாழ்ந்து வந்தான். அவன் இருதயம் முழுவதும் உலகத்தால் நிரப்பப்படிருந்தது. உலகமே அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது.  ஆனால் இப்பொழுது உலகத்துக்குரியவனாய் அல்ல, தேவனுக்குரியவனாய் மாற்றப்பட்டிருக்கிறான். உலக சிந்தை ஒழிந்து பரலோக சிந்தையை தரித்திருக்கிறான்.  தற்போது உலகத்தின் பற்று அல்ல, வரப்போகிற நகரத்தை நாடிப்போகிறேன் என்று சொல்லுகிறான். ஆகவே அவனுக்குக் கொடுப்பது கஷ்டமானதாக அல்ல. வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே மேலானது. கொடுப்பதால் நீ ஒருபோதும் குறைவுபடமாட்டாய், அதிகம் மகிழ்ச்சியை பெறுவாய். கொடுப்பதால் நாம் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டோம், அதற்கு பதிலாக இன்னும் அதிகமாய் ஆசிர்வதிக்கப்படுவோம்.