ஜூன் 18 

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17).

      ஒரு மனிதன் இந்த உலகத்தில் சரீரப்பிரகாரமாக உயிருடன் இருக்கும் பொழுது  பேசுகிறான், நடக்கிறான், எல்லாவற்றையும் செய்கிறான். ஆனால் அவனுடைய ஆத்துமா மரித்ததாகவே காணப்படுகிறது. ஒரு மெய் விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்கையில் ஜீவனோடு இருப்பதற்கான அடையாளம் அவனுடைய விசுவாசமே. அப்பொழுது அவனில் தேவனுக்குரிய காரியங்களும், நடக்கைகளும், செயல்களும்  காணப்படும். இது அனைத்துமே அவனால் உண்டானதல்ல. அது தேவன் அவனுக்கு கிருபையாக கொடுக்கிற விசுவாசத்தின் மூலம் நடைபெறும் செயல். 

      ஆவிக்குரிய வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு வாழுகிற வாழ்க்கையாக இருக்கிறது. நம்முடைய முயற்சியானால் விசுவாசத்தைப் பெறமுடியும் என்று எண்ணி செயல்படும் பொழுது நிச்சயமாக அதன் முடிவு தோல்வியே. விசுவாசத்தை சார்ந்து வாழுகிற மக்கள் எவ்விதம் இருப்பார்கள்? “அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்” (சங்கீதம் 84:7). விசுவாச வாழ்க்கை என்பது பெலத்தின் மேல் பெலன்கொண்டு கிறிஸ்துவுக்குள் வெற்றி பெறுகிற வாழ்க்கையாக இருக்கிறது. விசுவாசத்தின் முடிவு மகிமைகரமான ஒன்று.

      ஒரு தேவப்பிள்ளையின் விசுவாச வாழ்க்கையில் அனுதின பெலமானது, தேவனுடைய பரிபூரண பொக்கிஷ சாலையிலிருந்து கிருபைகளை பெற்று வாழுகிற வாழ்க்கையாக இருக்கிறது. ஆகவே தான் வேதம் சொல்லுகிறது: “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்” (யோவான் 1:16). விசுவாசம் கிருபையினால் உண்டாகும் ஈவு. இந்த விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானும் பிழைப்பான்.