டிசம்பர் 9
“ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”(மத்தேயு 7:11).
தேவன் ஒரு சாதாரணமான விளக்கத்தின் மூலம் நம்முடைய அவிசுவாசத்தைக் கடிந்து கொள்ளுகிறதைப் பார்க்கிறோம். பொல்லாதவர்களாகிய நாமும் கூட பிள்ளைகளுக்கு நல்ல ஈவை கொடுக்க அறிந்திருக்கும்பொழுது, ஏன் தேவன் நமக்கு நன்மையானதை தருவார் என்பதை சந்தேகப்படுகிறோம். இதனை சிந்திக்கும்படியாக இவ்விதமான கேள்வியை தேவன் நம்மிடத்தில் கேட்கிறார். சங்கீதம் 86:5 -ல் “ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்”என்று இந்த சங்கீதக்காரன் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். கிருபையில் அவர் அளவற்றவர் என்பதை நினைவில் கொள்.
ஆகவே தேவன் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இன்னுமாக தேவன் “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை”(ஏசாயா 49:15) என்று தேவன் சொல்லுகிறார். பொதுவாக ஸ்தீரியானவள் தன் கர்ப்பத்தின் கனியை மறப்பதைப் பார்ப்பது அரிது. ஆனாலும் உலகத்தில் ஒரு சிலர் அவ்விதம் தன் கர்ப்பத்தின் கனியை மறப்பதை நாம் பார்க்கிறோம். தேவன் சொல்லுகிறார் ஒருவேளை அவர்கள் மறந்து விடாலாம், ஆனால் நான் உன்னை மறப்பதில்லை என்று. அருமையானவர்களே நம்முடைய அவிசுவாசம் எப்பொழுதும் தேவனை சந்தேகிக்கும். அது ஒருவிதத்தில் தேவனை துக்கப்படுத்தக் கூடிய செயலாகும். அன்பான சகோதரனே சகோதரியே தேவன் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுபவர்களுக்கு நன்மையானதை அதிகம் கொடுப்பார் என்பதை அறிந்து கொள். விசுவாசத்தோடே கர்த்தரை நோக்கிப் பார்.