பிப்ரவரி 15 வேதனை நீங்கி சுகமாயிரு 1 சாமு 1:1-20

“அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்” (1 சாமு 1:17).

ஒருவேளை நீங்கள் தேவனுடைய சமூகத்திலே அநேக விண்ணப்பங்களை ஏறெடுத்திருக்கலாம். ஆனாலும் அநேக வேளைகளில் அவைகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொண்ட சமாதான உணர்வோடு திரும்பிப் போகாமல் இருக்கலாம். நீண்ட காலமாக நீங்கள் தேவனுடைய சமூகத்தில் வைக்கும் விண்ணப்பங்கள் கைக் கூடிவராமல் தள்ளிப்போனதாக இருக்கலாம். ஆனால் அவைகளுக்கு நிச்சயம் தேவன் பதிலளிப்பார் என்பதை நம்புங்கள்.

அன்னாளுடைய நிலையை நோக்கிப் பார்க்கும்பொழுது, அவள் வாழ்க்கையின் ஒரு குறைவு. அது என்னவென்றால் அவளுக்கு பிள்ளைகள் இல்லாமல் இருந்தது. அதனால் அவள் வாழ்க்கையில் அவமானமும், நிந்தையும் சகிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அந்த நிலை நீடிக்கவில்லை. கர்த்தருடைய சமுகத்தில் அவள் போன பொழுது அவளுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்கிற தேவன் ஒருவர் உண்டு.

புதிய ஏற்பாட்டில் இயேசு “அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்” (மாற்கு 5:34) என்று சொன்னார். மெய்யாலும் அந்த ஸ்திரீயானவள் பயந்து கர்த்தருடைய சமுகத்தில் வந்தாள். நடுங்கிக்கொண்டிருந்தாள், ஆனால் ஆண்டவர் அவளைப் பார்த்து சமாதானத்தோடே போ என்று சொன்னார். அது மட்டுமல்ல உன் வேதனை நீங்கி சுகமாயிரு. உங்களுடைய வாழ்க்கையிலும் வேதனை கொடுக்கக்கூடிய பல காரியங்கள் இருக்கலாம். வியாதிகள் அல்லது பலவிதமான குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் ‘உன் வேதனை நீங்கி நீ சுகமாயிரு’ என்று நலமானதைக் கட்டளையிடுவார். உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான ஆசீர்வாதத்தை அவருடைய சமூகத்திலிருந்து உங்களுக்குக் கொடுத்து உங்களை ஆதரிப்பார்.