டிசம்பர் 14 

      “நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்”(எரேமியா 31:25).

        விடாய்த்த ஆத்துமா என்று சொல்லும்பொழுது வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளினால் நம்பிக்கையற்று தளர்ந்துபோன ஆதுதுமா என்பதைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால் கர்த்தர் தாமே இவ்விதமான ஒரு ஆத்துமாவை சம்பூரணம் அடையச் செய்கிறேன் என்று சொல்லுகிறார். வெறுமையாய் நம்பிக்கையற்று போன ஆத்துமா, வாழ்க்கையில் தளர்வுற்ற ஆத்துமா சம்பூரணமான காரியங்களைப் பார்க்கக் கூடுமா? மனிதனால் கூடாது, ஆனால் தேவனால் எல்லாம் கூடும்.

   கர்த்தர் பெரிய காரியங்களை செய்கிறவர். சங்கீதக்காரன் இவ்விதமாய் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக”(சங் 107:9). கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் ஆச்சரியமான விதங்களில் அதிசயமான காரியங்களை செய்கிறவர். ஆகவே அவருடைய கிருபையின் நிமித்தம் இரக்கத்தின் நிமித்தம் அதிசயங்களை காணச்செய்யக்கூடியவர். அதுமாத்திரமல்ல, தோய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று சொல்லுகிறார். ஒன்றுமில்லாமல் வெறுமையாய் போன ஆத்துமாக்களை நிறைவை கண்டையச் செய்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

      அருமையான இரண்டு பதங்களை இந்த வசனங்களில் கர்த்தர் சொல்லுகிறார். ஒன்று சம்பூரணம் மற்றொன்று நிறைவு. உன்னுடைய ஆத்துமாவில் இன்று விடாய்த்த நிலையில் தோய்ந்து போய்க் காணப்படுகிறதா? சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் தாமே உன்னை சம்பூரணமாக மாற்றுகிறவரும், நிரப்புகிறவருமாக இருக்கிறார். அவருடைய கிருபையின் நிமித்தம் இவ்விதமாகவே செய்கிறவராக இருக்கிறார். இன்னுமாக தேவன் எரேமியா 31:14 ல் “என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”. கர்த்தர் அளிக்கக் கூடிய நன்மைகள் திருப்தியாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் என்பதை விசுவாசி.