“இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலிப்பியர் 2:12).
பவுல் இந்த இடத்தில் நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பைக் குறித்து நாம் எவ்விதமாய் உணர்ந்து வாழ வேண்டும் என்பதைப் பேசுகிறார். நாம் நம்முடைய இரட்சிப்பைக் காத்துக்கொள்வதில் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் இரட்சிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் கடைசி மட்டும் இருக்கும்படியான ஒன்று. தேவனைத் தேடுவதிலும், ஜெபிப்பதிலும் நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாகக் காணப்படுகிறோமா? நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் மெத்தனமுள்ளவர்களாக இருக்கக் கூடாது. “எப்படியெனில், தன்மேல் அடிக்கடிப் பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” (எபிரெயர் 6:7-8). கர்த்தர் நமக்கு எவ்வளவோ கிருபைகளை நன்மைகளைக் கொடுத்திருக்கின்றார். நாம் கனிகொடுக்கின்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா அல்லது நமது மாம்ச சிந்தையினால் வழிநடத்தப்படுகிறோமா? என்பதைக் குறித்து நாம் சிந்தித்து பார்ப்பது அவசியம். நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய விழிப்பும் ஜாக்கிரதையும் இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் நாம் தேவ பயத்தோடு இரட்சிப்புக்கேற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உணர்வோடு வாழுகின்றோமா அல்லது நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்லி மெத்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? தேவனுடைய சத்தியத்தைக் கேட்டு நாம் விழிப்புள்ளவர்களாய் வாழுவது அவசியம்.