நவம்பர் 9  

      “உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப் படுகிறதினாலே” (பிலமோன் 1:6).

      நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்குரிய நன்மையான காரியங்கள் தெரியப்படுவது மிக அவசியம். அநேக சமயங்களில் அநேகருடைய வாழ்க்கையில் உலகப்பிரகாரமான காரியங்கள் வெளியரங்கமாய் காணப்படுகின்றது. அவ்விதமான மக்கள் ஆவிக்குரிய காரியங்களை வெளிப்படுத்தாமல், உலகத்தின் காரியங்களை வெளிப்படுத்துவது மிகவும் வேதனையான ஒன்றாகும். அவ்விதமான மக்கள் சபைக்கு ஒரு தடைக்கல். நாம் எவ்வாறு காணப்படுகின்றோம்?

      “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்” (பிலிப்பியர் 1:10-11) என்று பவுல் சொல்லுகிறார். நாம் சபை மக்களுக்கு ஒரு சாட்சியான வாழ்க்கையைக் கொண்டிருப்பது மிக அவசியமான ஒன்றாகும். நம் வாழ்க்கையில் கர்த்தருக்கேற்ற பயமும், விசுவாசமும், வைராக்கியமும், வாஞ்சையும், கொண்டிருப்பது நீதியின் கனியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

      நம் வாழ்க்கையில் நீதியின் கனி காணப்படுகின்றதா, அல்லது கசப்பான கனி காணப்படுகின்றா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுவது மிக அவசியம். நாம் நீதியின் கனியை வெளிப்படுத்தும் பொழுது, தேவனுக்கு மகிமையும் கனமும் துதியையையும் உண்டாக்கும். மேலும் நாம் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியும், மெய் சமாதானத்தையும் கொண்டிருப்போம். அது கர்த்தருக்கேற்ற சாட்சியுள்ள வாழ்க்கை. அநேகருக்கு உன் வாழ்க்கையின் கனி ஆசீர்வாதமாகக் காணப்படும். எவ்விதக் கனியை நீ கொண்டுள்ளாய்?