ஜனவரி 1

“நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்” (ஆகாய் 2:19)

      ஆண்டவர் ஏன் இந்த இடத்தில் “இன்று முதல்” என்று சொல்லுகிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் அவர் ஒருபோதும் குறைவு வைப்பவர் அல்ல. இந்த வசனத்தின் முந்தின பகுதியில் “களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே;” (ஆகாய் 2:19) என்று சொல்லுகிறார். ஆகவே இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிற நமக்கு ஆண்டவர் கடந்த காலத்தினுடைய வறட்சியையும், கடந்த காலத்தினுடைய தோல்வியையும் நினைவுகூர்ந்து புதிய விதமாக இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்.

மேலும் சகரியா 8:12 -ல் “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்” என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆகவே நாம் செய்கிற ஒவ்வொரு விதைப்பு முதலான ஒவ்வொரு பணியையும் கர்த்தர் ஆசீர்வதித்து பலனைக் கட்டளையிடுகிறேன் என்று சொல்லுகிறார்.

இன்னுமாக கர்த்தர் “சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது” (சகரியா 8:13) என்று சொல்லுகிறார். இந்த புதிய ஆன்டில் உங்களுடைய கைகள் திடப்படட்டும். ஏனென்றால் இரட்சிக்கிற தேவன் நம்மோடு இருக்கிறார். பயப்படவேண்டிய அவசியமில்லை. அவர் சொன்னதை என்றென்றைக்கும் நினைவேற்றுகிற தேவனாக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர், “நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்” (சகரியா 8:15) என்று சொல்லுகிறார். கர்த்தர் நம்மை இந்த புதிய ஆண்டில் அவ்விதமாகவே ஆசீர்வதிப்பாராக! ஆமென்!