மார்ச் 1    

“நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை”

(உன்ன 3:2).

      நாம் தேவனை எவ்விதமாய் தேடுகிறோம் என்பது மிக அவசியம். இந்த இடத்தில் ஆத்தும நேசரைக் காணமுடியாமல் தவிக்கும் படியான நிலையைக் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எழும்ப வேண்டியது அவசியமானது. நாம் எழும்பாமல் தேவனுடைய காரியங்களைத் தேடுவோமானால் அது நமக்குக் கிட்டாது. நம்முடைய வாழ்க்கையில் தேவனை உண்மையான உணர்வோடு தேடுவது அவசியமானது. அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடுகூடிய தேடுதலாக அது இருக்கவேண்டும்.

      அநேகர் ஆண்டவரைத் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவரை உண்மையான கருத்தோடும் ஜாக்கிரதையோடும் தேடுபவர்களாக இருப்பதில்லை. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனை எவ்விதம் தேடுகிறோம் என்பது மிக அவசியம். “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது” (ரோமர் 13:11). நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நித்திரையை விட்டு எழும்புவது மிக அவசியம். வீடுகளிலும், தெருக்களிலும் என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்று சொல்லி புறப்படவேண்டும். நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவனை தேடுவேன் என்று சொல்லுவது சரி இல்லை.

      நம்முடைய வாழ்க்கையில் நாம் வெளியே வரவேண்டும். நம் சொந்த எண்ணங்கள், சொந்த வழிகள், சொந்த தீர்மானங்களை விட்டு வெளியே வரவேண்டும். அநேகருடைய வாழ்க்கையில் தாங்கள் விரும்புகிற வழியில் தேவனைக் கண்டுபிடிப்போம் என்கிறார்கள். அல்லது தங்களுடைய சொந்த வழிகளில் தேட முடியும் என்பதாக எண்ணி ஏமாந்து போகிறார்கள். ஆனால் தேவனை அவ்விதமாக தேடிக் கண்டடைய முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தேவன் நமக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். அவரை கருத்தோடு தேடும்போது நிச்சயமாகக் கண்டடைவோம்.