கிருபை சத்திய தின தியானம்

 ஜூலை  2           உன்னை கைவிடமாட்டார்         1 நாளா 28 ; 10 -21

‘நீ பலங்கொண்டு தைரியமாருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.’ (1 நாளா 28 : 20 )

            தாவீது சாலொமோனிடம் தேவ ஆலயத்தைக் கட்டுவது குறித்துச் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தாவீது தேவாலயத்தைக் கட்ட விரும்பினார். அதற்கு தேவையான எல்லாப் பொருட்களும் சேகரிக்கப்பட்டன. ஆனாலும் தேவனுடைய கட்டளையின்படி சாலொமோன் ஆலயத்தைக் கட்டும்படியாக தெரிந்துக்கொள்ளப்பட்டான். சாலொமோன் வயதில் குறைந்தவன், செய்யவேண்டியதோ பெரியதான பொறுப்பு, தேவாதி தேவனுடைய ஆலயத்தைக் கட்டவேண்டும். நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு’ என்று தாவீது சொன்னான். தேவன் உன்னைத் தம்முடைய மகத்துவமான திட்டத்தை நிறைவேற்றும்படி அழைப்பாரானால், நீ பயப்படவேண்டிய அவசியமில்லை. கலங்கவேண்டிய தேவையுமில்லை. ஏனென்றால் தேவனுடைய காரியத்தை தேவ சித்தப்படி செய்யும் எந்த காரியத்திலும் தேவன் உன்னுடனே கூட இருப்பார்.

            அன்பானவர்களே! தாவீதைப்போல மற்றவர்களுக்கு தேவனைக்குறித்துச் சாட்சி பகரும்படியான ஒரு வாழ்க்கை உங்களிடத்தில் உண்டா? தேவன் உன்னுடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவத்தையும் வல்லமையையும் விளங்கப்பண்ணின காரியங்களில்லையா? தாவீது மேலும் என்ன சொன்னார்? ‘கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்காக சகல கிரியைகளும் செய்து தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.’ ஆம்! யோசுவா எவ்விதம் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தவேண்டிய பெரிதான பொறுப்பில் இருந்தபோது யோசுவாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் சாலொமோனுக்கும் கொடுக்கப்பட்டது. அவ்விதமாகவே சாலொமோனுக்கு வாக்குத்தத்தத்தை நிறைவேற்றின தேவன் உனக்கும்  செய்வார். வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜெபி, தேவன் உன் வாழ்க்கையில் அவைகளை நிறைவேற்றுவார்.