கிருபை சத்திய தின தியானம்

மே 13                  மன்னிக்கும் தன்மை          லூக்கா 23; 33 – 43

இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது

இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்  (லூக் 23 : 24 )

     மன்னிக்கமுடியாத குணம் உலகத்தில் மலிந்தே கிடப்பதைப் பார்க்கமுடியும். எங்கு பார்த்தாலும் இதனால் வெறுப்பான, கசப்பான உணர்வுகள் அதிகமாக காணப்படுகின்றன. அநேக குடும்பங்களில் கணவன் மனைவியையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும், அண்ணன் தம்பியையும், தம்பி அண்ணனையும் என்று மனித உறவுகளில் மன்னிக்கமுடியாததினால் பெரும் பிளவுகள் உண்டாயிருக்கிறது. மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் மன்னிக்கமுடியாமல் எத்தனை குடும்பங்களில் தொடர் சண்டைகளும் யுத்தங்களும் நடக்கின்றன. கிறிஸ்தவ குடும்பங்கள் என்று அழைக்கப்படும்  அநேக குடும்பங்களில் இதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் ஒரு மெய் கிறிஸ்தவன் இவ்விதமாக இருக்கலாமா? இருக்கக்கூடாது. அவன் அவருடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசுவைப்போலவே இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறான். அவருடைய மன்னிக்கும் தன்மை அவனில் வெளிப்படவேண்டும்.

     ஆண்டவராகிய இயேசு தன்னுடைய எதிராளிகளை மன்னித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் எதை போதித்தாரோ,  அதையே செய்கிறதையும் காண்கிறோம். நாம் கர்த்தருடைய ஜெபத்தில் எப்படி ஜெபிக்கும்படியாக கற்பிக்கபிக்கப்படுகிறோம்? எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல என்று சொல்லி எங்கள் கடன்களை அதாவது பாவங்களை மன்னியும். இந்த ஜெபத்தை நாம்  தொடர்ந்து ஜெபித்துக்கொண்டு மற்றவர்களுடைய தப்பிதங்களை, பாவங்களை மன்னிக்கவில்லையென்றால் நாம் தேவனிடத்தில் பொய் சொல்லுகிறோம். நீ மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காமலேயே மன்னித்ததாக பொய் சொல்லுகிறாய். நீ  எத்தனை முறை கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லுகிறாயோ அத்தனை முறை பொய் சொல்லுகிறாய்.

     நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். மற்றவர்களுடைய பாவங்களை நாம் மன்னிக்கும்போது தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொல்லுகிறார்’ (மத் 6 : 14 ). மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் செய்வோம்.