கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர்  6                                                பாவமன்னிப்பு                             மீகா  7 : 10 – 20

நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.’ (மீகா 7 : 19)

தேவனுடைய வார்த்தையை சரியாக அறியாததினால் அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் தெளிவற்றவர்களாய் வாழுகிறார்கள். அதில் ஒன்று பாவத்துக்குரிய காரியம். தேவன் எந்த ஒரு மனிதனை இரட்சிக்கிறாரோ அந்த மனிதனின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார். சில பாவங்களை மட்டும் மன்னித்து, மற்றபாவங்களை மன்னிக்காமல் விடுகிறவர் அல்ல. அல்லது சிலபாவங்களை மட்டும் நீக்கி, மற்ற பாவங்களை அவர் அவனுக்கு எதிராக நிறுத்துகிறவரும் அல்ல. சில ஊழியர்கள் இவ்விதம் பயமுறுத்துவார்கள். அருமையானவர்களே! வேதம் இதைப்பற்றி என்ன சொல்லுகிறது என்பதுதான் முக்கியம். ‘அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொண்டார்.’ (தீத்து 2 : 14) ‘சகல’ என்று சொல்லப்படும் போது அனைத்தும், எல்லா அக்கிறமங்களினின்றும் தேவன் நம்மை மீட்டுக்கொண்டார். அதற்காகவே இயேசு ‘தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’ என்றும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். (சங்கீதம் 103 : 12). தேவன் எப்படியாக நம்முடைய பாவங்களை விலக்கிவிடுகிறார் என்று பாருங்கள். இவ்விதம் அவைகளை நீக்குகிற தேவன், மறுபடியுமாக அவைகளை எண்ணி நம்மை நியாயத்தில் நிறுத்துகிறவர் அல்ல. ஆகவே தேவன் ஒரு பாவியை மன்னிக்கும்பொழுது அது முழுமையான மன்னிப்பே. ‘அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராய் இருக்கிறார்.’ (1யோவான் 1 : 7 ,9 ) இங்கு முக்கியமான இரண்டு வார்த்தைகளைக் கவனியுங்கள். ‘சகல பாவங்களையும்’ என்றும் ‘எல்லா அநியாயத்தையும்’ என்றும் சொல்லப்படுகிறதை கவனியுங்கள். நம்முடைய பாவங்களை சமுத்திரத்தின் ஆழங்களிலே தேவன் போட்டுவிடுகிறார். அவைகள் மறுபடியும் நினைக்கப்படுவதில்லை.